வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,338 ஆக உயர்வு

டிசம்பர் 26, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 551 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39,781 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய  தினம் அடையாளம் காணப்பட்டவர்களில்  கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 300 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 52 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 37 பேரும்  ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 162 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 36,077 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 27,931  பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 14,933 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளி நாடுகளிலிருந்து 139 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் 58 பேர் இந்தியாவில் இருந்தும், 50 பேர் கட்டாரில் இருந்தும், 31 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகைதந்தனர். இவர்கள் அனைவரும் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின் பின்னர் இராணுவத்தினால் மேற்பார்வை செய்யப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 771 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,338 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 8, 257 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன்  படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 79 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 6,276 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான  மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து  வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்வடைந்துள்ளது.