இலங்கை இராணுவத்தின் ‘வீர மாதா’ பாராட்டு நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது

ஜூலை 12, 2024

இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வீர மாதா' பாராட்டு நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இலங்கை இராணுவத் தலைமையகத்தில் இன்று (ஜூலை 12) இடம்பெற்றது.

இன்று காலை இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வரவேற்றார்.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சித்ராணி குணரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இலங்கை இராணுவ சேவா வனிதா பிரிவின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இறுதி யுத்தத்தின் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு 'பரம வீர விபூஷன்' மற்றும் 'வீர விக்ரம விபூஷன்' பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரை பணயம் வைத்து நாட்டிற்காக போராடிய போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாய்நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உயிர் தியாகம் செய்த அனைத்துப் போர்வீரர்களையும் நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமானது.

மேலும், நாட்டிற்காக அவர்கள் ஆற்றிய தியாகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போர் வீரர்கள் மற்றும் போர் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் இதன்போது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன, போர் வீரர்களின் அசாத்திய துணிச்சல், சுய தியாகம் மற்றும் அளவிட முடியாத சேவையைப் பாராட்டியதுடன், போர்க்களத்தில் தனது சொந்த அனுபவங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இலங்கை இராணுவ சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே, பிரதி பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், இராணுவ சேவை வனிதா பிரிவின் அதிகாரிகள், போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.