மகா சங்கத்தினரின் மத ஆசீர்வாதங்களுடன் தீகவாபிய தூபியில் புதையல்கள் மற்றும் புனித நினைவுச் சின்னங்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவம்.
ஜூலை 14, 2024- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
தீகவாபிய தூபியில் புதையல் பொருட்கள் மற்றும் புனித நினைவுச் சின்னங்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவம் இன்று (ஜூலை 14) மகா சங்கத்தினரின் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.
புத்தபெருமான் விஜயம் செய்த புனிதமான வழிபாட்டுத் தலங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாபிய தூபி முதன்மையானதாக திகழ்கின்றது.
புனித நினைவுச்சின்னங்கள் மற்றும் புதையல் பொருட்கள் கையளிக்கும் முக்கிய வழிபாட்டு நிகழ்வுடன் இணைந்து, புனித நினைவுச்சின்னங்கள் அறை, 20 விசாலமான அறைகள் மற்றும் வருகை தரும் பக்தர்களுக்கு தங்குவதற்கு தேவையான 4 பெரிய மண்டபங்கள், வண. தாரணகம குசலதம்ம தேரர் அவர்களின் பெயரில் நினைவு மண்டபம் ஆகியன பாதுகாப்புச் செயலாளரும், தீகவாப்பிய அருண அறக்கட்டளையின் பாதுகாவலரும் முதலாவது அறங்காவலருமான ஜெனரல் கமல் குணரத்ன அவர்களினால் பக்தர்களின் பாவனைக்காகவும் இதன்போது கையளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் பின்னணியில் உந்துசக்தியாக செயற்படும், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை வரவேற்றார்.
பாரம்பரிய முறையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட புனிதச் சின்னங்கள் மற்றும் புதையல் பொருட்கள், கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்களுக்கு அமைவாக, தீகவாபி தூபியின் பிரதான பீடாதிபதி மகாஓயா சோபித மற்றும் வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புனித சின்னங்களை கையளித்தார். அதன் பின்னர் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க தீகவாபி தூபியில் வண. மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் வைப்புச் செய்யப்பட்டது.
ஜனாதிபதியைத் தொடர்ந்து, தீகவாப்பிய அருண அறக்கட்டளையின் பாதுகாவலரும் முதலாவது அறங்காவலருமான ஜெனரல் கமல் குணரத்ன புனித சின்னங்களை தீகவாபி தூபியில் வைப்பதற்காக கையளித்தார்.
உலகம் முழுவதிலுமிருந்து தனவந்தர்கள் மற்றும் பக்தர்களினால் வழங்கப்பட்ட விலையுயர்ந்த தங்கம் பதிக்கப்பட்ட கற்கள் மற்றும் தங்கம் ஆகியவை தூபியில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க புனித நினைவுச்சின்னங்கள், தீகவாபிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும், பொதுமக்கள் வழிபடுவதற்காக குறித்த நினைவுச் சின்னங்கள் நாடு முழுவதம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வினை முன்னிட்டு கடந்த 7ஆம் திகதி (ஜூலை) தீகவாபிய வளாகத்தில் ஒரு வாரகால பிரித் ஓதுதல் இடம்பெற்றது.
பௌத்தர்களின் பதினாறு வழிபாட்டுத் தலங்களில், புத்தபெருமான் வருகை தந்த இடமான தீகவாபிய, புனிதமான புராதன மதஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பௌத்த சமய பக்தர்களினால் ‘தீகவாபிய அருண அறக்கட்டளை நிதியத்திற்கு’ வழங்கப்படும் நன்கொடைகள் மூலம் இந்த தீகவாபிய தூபியின் மறுசீரமைப்பு பணிகளுக்கு நிதியளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
தீகவாப்பிய அருண அறக்கட்டளையின் பாதுகாவலரும் முதலாவது அறங்காவலருமான பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் வழிகாட்டுதலின் கீழும், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க மற்றும் பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடனும் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்வில், மூன்று பீடங்களின் பீடாதிபதிகள் உட்பட வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினர், முன்னாள் ஜனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தயா கமகே, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைகளின் தளபதிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்களும் கலந்துகொண்டனர்.