இராஜாங்க அமைச்சர் தென்னகோனின் எண்ணக் கருவுக்கு அமைய, இளம் வீரர்களை கௌரவித்து, ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன

ஜூலை 17, 2024
  • முதன்முறையாக தேசிய மாணவர் படையணியின் தேசிய இளைஞர் வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் பங்கேற்பு

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மாணவர் படையணியின் தேசிய இளைஞர் வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வு, கொழும்பில் உள்ள தேசிய மாணவர் படையணியின் தலைமையகத்தில் இன்று (ஜூலை 17) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகை தந்த இராஜாங்க அமைச்சரை, தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுதந்த பொன்சேகா வரவேற்றார்.

இராஜாங்க அமைச்சர் தென்னகோனின் எண்ணக் கருவிற்கு அமைய இலங்கையின் இளம் வீரர்களை கௌரவித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு முதன்முறையாக தேசிய மாணவர் படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால சமூகத்தில் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் சிறந்த தலைமைத்துவப் பண்புகளுடன் இளைஞர்களை ஆற்றல்மிக்க, பல்துறை மற்றும் ஒழுக்கமான குடிமக்களாக மாற்றுவதற்காக இலங்கையின் இளம் வீரர்களை கௌரவிப்பதற்காக தேசிய மாணவர் படையணியினால் தேசிய இளைஞர் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு செல்வி சரித்மா ஜினேந்திரி மற்றும் செல்வன் சசிந்து நிம்சர ஆகியோருக்கு அவர்களின் துணிச்சல்மிக்க செயற்பாடுகள் மற்றும் மற்றவர்களின் நல்வாழ்வுக்கான தன்னலமற்ற செயலைப் பாராட்டி குறித்த விருதுகள் வழங்கப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன் அவர்கள்,

விருது பெற்ற இரு வீரர்களின் முன்மாதிரியான வீரச் செயல்களுக்காக அவர்களைப் பாராட்டியதுடன், தேசிய மாணவர் படையணியினால் முதன்முறையாக வழங்கப்பட்ட இந்த விருது மிகவும் பொருத்தமானது என்றார்.

மேலும், தேசிய மாணவர் படையணியானது பாடசாலை மாணவர்களை திறமையான பயிற்சி பாடத்திட்டத்தின் மூலம் பயிற்றுவித்து ஊக்கப்படுத்தி வருகின்றது எனவும் தெரிவித்தார்.

தேசிய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பங்களிக்கவும் மற்றும் தேசிய மாணவர் படையணியுடன் இணைந்து செயற்படவும் குறிப்பாக இளைஞர்களுக்கு இராஜாங்க அமைச்சர் இதன்போது அழைப்பு விடுத்தார்.

36 அடி ஆழமான கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 04 வயது குழந்தையின் உயிரை புத்தளம், மஹகும்புக்கடவல, கிவுல பிரிவெனவில் தரம் 10ல் கல்வி கற்கும் சசிந்து நிம்சர என்ற மாணவர் தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளார்.

மேலும், பாதுக்க சிறி பியரதன வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 17 வயதுடைய சரித்மா ஜினேந்திரி என்ற மாணவி, அண்மையில் வக் ஓயாவில் இரவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வீட்டிற்குள் சிக்கியிருந்த கணவன் மற்றும் மனைவியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு காப்பாற்றிய இருவரே இந்த நிகழ்வின் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை. செனவிரத்ன, தேசிய மாணவர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விருது பெற்ற இரு மாணவர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.