இராணுவ கவசப் படையணின் "Armour Symposium -2024" பாதுகாப்பு செயலாளர் தலைமையில் இடம்பெற்றது

ஜூலை 19, 2024

இலங்கை இராணுவ கவசப் படையணின் ஏற்பாட்டில் இன்று (ஜூலை 19) கொழும்பு ரொக் ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்ற “Armour Symposium -2024” இல் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கலந்து கொண்டார்.

குறித்த கருத்தரங்கு, "Forging Future Frontiers: Empowering Armour through Evaluation and Innovation" என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு நடைபெற்றது.

இராணுவ கவச வாகன தொழில்நுட்பத் துறையிலுள்ள வல்லுநர்கள், அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து கவச வாகனம் தொடர்பில் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன தொழில்நுட்பத்தின் திறன்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய அறிவைப் பரிமாறிக் கொள்ளவதே இந்த கருத்தரங்கின் நோக்கமாகும்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை இலங்கை இராணுவ கவசப் படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேந்திர பெர்னாண்டோ வரவேற்றார்.

முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஜகத் ஜயசூரிய (ஓய்வு) இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.

இறுதி யுத்தத்தின் போது நாட்டிற்காக அளப்பரிய சேவையாற்றிய முன்னாள் சிரேஷ்ட இராணுவ வீரர்களும் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தின் முதுகெலும்பாக இருக்கும் துணிச்சலான இராணுவ அதிகாரிகளின் சேவையினை பாராட்டியதுடன், நாட்டுக்கான முப்படையினரின் சேவையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும், பயிற்சித் திட்டங்கள் தொழில்நுட்பத் திறன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நவீன ஆயுதங்களுக்குத் தேவையான அறிவாற்றல் திறன்கள் மற்றும் விரைவில் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளர் மேலும் உரையாற்றுகையில், நமது இராணுவ வீரர்களை ஒழுங்கமைத்து, அதிக மன அழுத்தத்தின் சிக்கலான மற்றும் தெளிவற்ற சூழ்நிலைகளில் கூட, மிகவும் திறம்பட பணியாற்றக்கூடிய, திறமையான மற்றும் விவேகமுள்ள தலைவர்களை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் வலியுறித்தினார்

இந்த கருத்தரங்கின் போது பிரதம அதிதி மற்றும் பிரதம பேச்சாளர் ஆகியோருக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, இலங்கை இராணுவத்தின் தற்போது சேவையாற்றும் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கௌரவ அதிதிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.