இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் மியன்மார் பிரதமரை சந்தித்தார்
ஜூலை 28, 2024இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, மியன்மார் அரச நிர்வாக சபையின் தலைவரும் அந்நாட்டின் பிரதமருமான சிரேஷ்ட ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்கை ஜூலை 26 மியன்மார் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
மியன்மாரில் நடைபெற்ற பிம்ஸ்டெக்கின் (BIMSTEC) தேசிய பாதுகாப்பு பிரதானிகளின் 4ஆவது மாநாட்டில் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளர் தனது விஜயத்தின் ஓர் அங்கமாக மியன்மார் பிரதமரைச் சந்தித்தார்.
மியன்மார் அரச நிர்வாக சபை அலுவலகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளரை சிரேஷ்ட ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் வரவேற்றார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, இராஜதந்திர உறவுகள் மற்றும் மத விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு பிரமுகர்களும் கலந்துரையாடினர்.
மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான பயிற்சி வாய்ப்புகளை பரிமாறிக்கொள்வது மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.
இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, மியன்மாரின் பிம்ஸ்டெக் (BIMSTEC) தேசிய பாதுகாப்புத் தலைவர்களின் 4வது கூட்டத்தை நடத்துவது மற்றும் பிற உறுப்பு நாடுகளுடன் இணைந்து கூட்டத்தில் தீவிரமாக பங்கேற்பது குறித்தும் இரு அதிகாரிகளும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மியன்மாரில் பயங்கரவாத குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சைபர் கிரைம் பகுதியில் உள்ள முகாமில் குற்றச் செயல்களுக்காக வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிக்க உதவுமாறு மியன்மார் பிரதமர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அதிகாரிகளுடன் ஒத்துழைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதில் தமது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மியன்மார் பிரதமரும் இதன்போது வலியுறுத்தினார்.
மியன்மார் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டின் கவுன்சிலின் இணைச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் யே வின் ஓ, அரச நிர்வாக கவுன்சில் தலைவர் அலுவலகத்தின் யூனியன் அமைச்சரான அட்மிரல் மோ ஆங், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்பில இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்புச் செயலாளர் உடன் மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் அதிமேதகு திருமதி பிரபாஷினி பொன்னம்பெரும, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியான விங் கொமாண்டர் நுவன் மெதகம ஆகியோரும் கலந்துகொண்டனர்.