சீன மக்கள் விடுதலை இராணுவம் நிறுவப்பட்டதன் 97வது ஆண்டு நிறைவு விழா கொழும்பில் கொண்டாடப்பட்டது

ஜூலை 30, 2024

இலங்கைக்கான சீனத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் நிறுவப்பட்டதன் 97வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று (ஜூலை 29) கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கைக்கான சீனத் தூதுவரான அதிமேதகு கி சென்ஹோங் மற்றும் சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் சோவ் போவ் ஆகியோரின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர்  ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் :-

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும்  நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்ததுடன், வலுவான இராஜதந்திர உறவுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல வழிகளில் சீனா வழங்கிவரும் உதவிகளுக்காக சீனத் தூதுவருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய சீனத் தூதுவர், “சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்பு அண்டை நாடுகளாகும், இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 67வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது எனத் தெரிவித்தார்.

மேலும், இரு தரப்பு கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு இராணுவ உறவுகள் ஆகியன மேலும் உயர் மட்டத்திற்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகள், ஓய்வுபெற்ற மற்றும் சேவையிலுள்ள முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள்  ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.