இலங்கையின் நீரியல் ஆய்வை விரிவுபடுத்துவதற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த Multi Beamer Echo Sounder உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவிப்பு

ஜூலை 30, 2024

அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய உதவிச் செயலாளர் திருமதி கரேன் ராட்போர்ட் அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இன்று (ஜூலை 30) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

அவுஸ்திரேலியப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய உதவிப் பணிப்பாளர் திரு. லாச்லன் சில்லார், கொள்கை அதிகாரி திரு. நோஹ் டயமன்டோபௌலோஸ் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அமண்டா ஜோன்ஸ்டன் ஆகியோரும் அவுஸ்திரேலிய தூதுக்குழுவில் இணைந்து கொண்டனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை அவுஸ்திரேலிய தூதுக்குழுவை அமைச்சர் தென்னக்கோன் வரவேற்றதுடன், இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்தும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் நீரியல் அளவீட்டு உபகரணங்களை இலங்கைக்கு வழங்குவதற்கும், குறித்த உபகரணங்களை இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கவும் 2024 பெப்ரவரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு இந்த உபகரணங்களை வழங்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் திருமதி ராட்போர்ட் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Kongsberg நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த உபகரணத் தொகுதியானது ஆழமற்ற நீர் மல்டி-பீம் எதிரொலி ஒலிப்பான் மற்றும் தொடர்புடைய உபகரணங்களைக் கொண்டுள்ளது. இது இலங்கையில் நீரியல் ஆராய்ச்சி மற்றும் அளவீட்டு நடவடிக்கைகளின் திறன்களை அதிகரிக்க நேரடியாக பங்களிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில், இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு இடையிலான முதலாவது 'பாதுகாப்பு உரையாடலுக்கான' தற்போதைய ஏற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பு, இரு தரப்பையும் பாதிக்கும் பாதுகாப்பு சவால்கள் மற்றும் அந்த சவால்களை சமாளிக்க தேவையான உறவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.