ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுனவத்தின் ஊழியர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ‍பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது

ஆகஸ்ட் 01, 2024
  • 500 சீ மார்ஷல் (Sea Marshal) பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருவதுடன், மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுனவத்தின் சேவையாற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் நேற்று (ஜூலை 31) பத்தரமுல்லை சுஹுருபாய வளாகத்தில் இடம்பெற்றது.

இராணுவ சேவையில் இருந்து ஓய்வுபெற்ற போர்வீரர்களின் சேவைகளை மேலும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுனவம் 2007ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது.

ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் நிறுவனத்திற்கு ஆற்றிய மதிப்புமிக்க சேவையைப் பாராட்டுவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய ஜெனரல் குணரத்ன, ஆயிரக்கணக்கான ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பல சவால்களை எதிர்கொண்டு ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் உதவிவருவதாகத் தெரிவித்தார்.

மேலும், ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையின் பயனாக, அந்த நிறுவனத்திற்கு 500 சீ மார்ஷல்களை (Sea Marshal) ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வு நடந்து வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதுடன், இதன்மூலம் நாட்டிற்கு தேவையான அந்நிய செலாவணியை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மேஜர் ஜெனரல் பி சந்திரவன்ஷ (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் திஸாநாயக்க, ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் பிரதம கணக்காளர் சிசிரகுமார சமரதுங்க, சபை உறுப்பினர் கனிஷ்க டி சில்வா, ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உட்பட கௌரவ அதிதிகள் மற்றும் பெருந்தொகையான ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.