கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் புதிய மாணவர் விடுதி நிர்மாண பணிகளை பாதுகாப்பு செயலாளர்ஆய்வு செய்தார்

ஆகஸ்ட் 06, 2024

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி மாணவர் விடுதி கட்டிடத்தை பார்வையிடுவதற்காக இன்று (ஆகஸ்ட் 06) ஸ்தல விஜயமொன்றை மேற்கொண்டார்.

இலங்கை இராணுவத்தின் 6 ஆவது பொறியியலாளர் சேவைப் படைப்பிரிவினால் இந்த உட்கட்டமைப்புத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மேலும் இத்துடன் பணியாளர்களுக்கான மூன்று மாடி விடுதி ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

முப்படையினரின் பங்களிப்பில் பாடசாலை அபிவிருத்தி பணிகள் மேட்கொள்ளப்பட்டு வருவதுடன் பாடசாலையின் விளையாட்டு மைதானம் இலங்கை கடற்படையால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. CCTV அமைப்பு, தீ அணைப்பு வசதி மற்றும் உள்ளக தொடர்பு வலையமைப்பு PA/PABX பணிகள் இலங்கை விமானப்படையினால் மேட்கொள்ளப்பட்டு வருகிறது.

கொழும்பு 02, மலே வீதியிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியானது முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பிள்ளைகளை பிரபல பாடசாலைகளில் சேர்ப்பது தொடர்பில் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்யுமுகமாக ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது விஜயத்தின் போது, ​​மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை விரைவாக வழங்குவதற்கான கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார். கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், நாட்டின் அடுத்த தலைமுறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பங்களித்து  வரும் பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்பை அவர் எடுத்துரைத்தார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு சேவைகள்) ஜயந்த எதிரிசிங்க மற்றும் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பணிப்பாளர் பிரிகேடியர் சித்ரால் குலதுங்க ஆகியோரும் பாதுகாப்பு செயலாளரின் விஜயத்தின் போது சமூகமளித்திருந்தனர்.