'மித்ர சக்தி' - 10 கூட்டு இராணுவப் பயிற்சி மாதுரு ஓயாவில் நிறைவு

ஆகஸ்ட் 24, 2024

பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்ளும் நோக்கில் இந்திய மற்றும் இலங்கை இராணுவங்கள் இணைந்து நடாத்திய மித்ர சக்தி இராணுவப் பயிற்சி கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானதுடன் இறுதி இராணுவப் பயிற்சி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் முன்னிலையில் மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையிலான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பயிற்சியானது, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தும் விரிவான தத்துவார்த்த மற்றும் நடைமுறை பயிற்சியின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்தியது.

கேணல் ரவீந்திர அலவத் தலைமையில் இலங்கை வந்த இந்திய இராணுவ படை குழு இந்த பயிற்சியில் பங்கேற்றதுடன் படையினரிடையே நட்புறவு மற்றும் பரஸ்பர புரிதலை வளர்ப்பதை நோக்கமாக் கொண்டு கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இப் பயிற்சியில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் கலந்து கொண்டார். இந்திய உயர் ஸ்தானிகர், திரு. சந்தோஷ் ஜா, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இரு நாட்டு இராணுவ சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, இராணுவத் தளபதியினால், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு பாராட்டுச் சின்னங்களாக நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன. பயிற்சியின் போது பயன்படுத்தப்பட்ட இராணுவ உபகரணங்களின் கண்காட்சியுடன் நிகழ்வு முடிவடைந்தது.

நன்றி - www.army.lk