இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட ‘சிமிக் பார்க்’ மற்றும் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

ஆகஸ்ட் 28, 2024

இலங்கை இராணுவத்தால் நிறுவப்பட்ட ‘சிமிக் பார்க்’ கிளிநொச்சி" கடந்த 25 (ஆகஸ்ட்) திறந்துவைக்கப்பட்டது. கிளிநொச்சி மக்களின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்யவும், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான அத்தியாவசிய வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்காகவும் இது ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து இதை திறந்து வைத்தார். ‘சிமிக் பார்க்’ கற்கைகளுக்காக பிரத்யேக பகுதிகள், கழிவறைகள், சுத்திகரிக்கப்பட்ட நீர், இலவச Wi-Fi மற்றும் நிலையான மின்சார விநியோகம் போன்ற பல வசதிகளை உள்ளடக்கியுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் 55 ஆவது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நளின் ஜயவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, வடபிராந்தியத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட பல வீடுகள் அண்மையில் பயனாளி குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டன. தருமபுரம் (கிளிநொச்சி), ஈவினை (யாழ்ப்பாணம்) மற்றும் கோண்டாவில் (யாழ்ப்பாணம்) ஆகிய இடங்களில் தனியார் நன்கொடையாளர்களின் உதவியுடன் இராணுவ தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் ஆள்திறன் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீடுகள் அண்மையில் (ஆகஸ்ட் 25 மற்றும் 26) வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பயனாளி குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.