இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த இந்திய மீன்பிடி இழுவை படகுக்கு இலங்கை கடற்படை உதவி

செப்டம்பர் 25, 2024

இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் மிதந்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடி இழுவை படகு நாடு திரும்புவதற்கு இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை உதவியது.

யாழ்ப்பாணம் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் மிதந்து கொண்டிருந்த இந்திய மீன்பிடி இழுவை படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 22) கடலோர பாதுகாப்பு படை மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் விரைவுத் தாக்குதல் படகு ஒன்றும் இதனை சோதனையிட்டதில், ஐந்து பேருடன் கன்னியாகுமரியில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் வழியில் பாதகமான காலநிலைக்கு மத்தியில் இயந்திர கோளாறு காரணமாக இப்படகு இலங்கை கடற்பரப்பிட்குள் மிதந்து வந்தது தெரியவந்துள்ளது, என கடற்படை ஊடகம் தெரிவிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு அறிவித்ததன் பின்னர், இலங்கை கடற்படையினர் இப்படகை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளை பொறியியல் பிரிவினரால் பழுதுபார்க்கப்பட்ட பின் இப்படகு திங்கள்கிழமை (செப். 23) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்வதேச கடல் எல்லை கோட்டிட்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.