சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
முப்படைகளின் உதவி தொடரும்
ஒக்டோபர் 13, 2024
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை நிவாரணக் குழுக்கள் ஏற்கனவே செயற்பட்டு வருகின்றன.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண சேவைகளை திறம்பட செயல்படுத்துவதற்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்கவும் அவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் பணிப்புரைக்கமைய பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் முப்படைத் தளபதிகள் இந்த நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி அலுவலகத்தின் ஊடாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய தரவுகளின்படி, மோசமான வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 6,018 குடும்பங்களைச் சேர்ந்த 24,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக 23 அனர்த்த நிவாரண மையங்கள் தற்போது செயற்பட்டு வருகின்றன, மேலும் 584 குடும்பங்களைச் சேர்ந்த 2,200 நபர்கள் அவற்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக விமானப்படை ஹெலிகாப்டர்கள், கடற்படை படகுகள் மற்றும் இராணுவ கவச வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் அம் மையங்களில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க முப்படை வீரர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவசர நிலைமைகளை அறிவிக்க மற்றும் உதவிகளை பெற்றுக்கொள்ள பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளவும் 0112136136, 0112136222, அல்லது 0112670002 அல்லது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC)இன் கட்டுப்பாட்டு அறை அவசர அழைப்பு 117ஐத் தொடர்பு கொள்ளலாம் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.