ஆயுதப்படையினர் வெல்ல நிவாரண பணிகளில் மும்முரம்
ஒக்டோபர் 15, 2024நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதப்படை மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் நிவாரணாப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் சிறிய நிலச்சரிவுகள் ஏட்பட்டுள்ள நிலையில் பல பிரதேசங்களில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆயுதப்படை மீட்புக் குழுக்கள் அனர்த்த முகாமைத்து நிலையத்துடன் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
மல்வானை, கட்டுகொட, வடரெக்க, சீதாவக்க, மீதொட்டமுல்ல, கொலன்னாவ, நவகமுவ, பெலவத்தை, யடதொலவத்தை ஆகிய பிரதேசங்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இராணுவம் நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளதாக இராணுவ ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இராணுவத்தின் அயர்ன்ஹோஸ் மற்றும் யூனிபபெல் கவச வாகனங்களும் படகுகளும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஏட்படக்கூடிய அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுக்க
6,500 படையினரும் 23 WMZ கவச வாகனங்கள், 34 யூனிபபெல் மற்றும் யூனிகார்ன் கவச வாகனங்கள் மற்றும் 56 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கம்பஹா, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு இலங்கை கடற்படை எட்டு வெள்ள நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளது. கடுவெல, மாபிம, நவகமுவ, இஹலகம, ஜா-எல மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேசங்களில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்படை அதன் மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளை பிரதேசங்களில் 48 நிவாரணக் குழுக்களை தேவைக்கேட்ப ஈடுபடுத்தப்படுவதற்கு தயார்நிலையில் வைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் உள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி (CDS) நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
நிவாரணக் குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவு பொருட்களை வழங்கவும் உதவுகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.