நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை என கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்
ஒக்டோபர் 16, 2024- தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துகையில் நமது மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் பொறுப்பு நமது பாதுகாப்புக் கட்டமைப்பில் உள்ளது - பாதுகாப்புச் செயலாளர்
"நாங்கள் யுத்தத்தின் தாக்கத்தைப் கண்டுள்ளோம், மேலும் அமைதியின் குணப்படுத்தும் சக்தியையும் அனுபவித்திருக்கிறோம். உங்கள் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் அடியெடுத்து வைக்கும் தருணம், நமது தேசம் கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்களை உங்களுடன் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தெரிவித்தார்.
அதேபோன்று, சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் ஒத்துழைப்பின் பெறுமதியை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) பொது பட்டமளிப்பு விழா நேற்று மாலை (அக்டோபர் 15) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இதன் இறுதி அமர்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பொது பட்டமளிப்பின் போது இம்முறை 1,728 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது. இதில் பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை மற்றும் PhD துறைகளில் பட்டம் பெற்ற, மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி, இலங்கை இராணுவ அகடமி, இராணுவ வழங்கள் முகாமைத்துவ கல்லூரி, கடற்படை, கடல்சார் கல்லூரி மற்றும் இலங்கை விமானப்படை அகடமி ஆகியவற்றின் மாணவர்களும் அடங்குவர்.
நிகழ்வுக்கு வருகை தந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை தலைவரும் பாதுகாப்புச் செயலாளலருமான எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு), மற்றும் உபவேந்தர் (VC), ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோர் வரவேற்றனர்.
1981 இல் முப்படை அதிகாரிகளின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொத்தலாவல பாதுகாப்பு நிறுவனம் முதலில் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் 2009இல் இது ஒரு முழுமையான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டதுடன் வெளி மாணவர்களுக்கும் இங்கு கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது, சர்வதேச மாணவர்களும் இங்கு பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் சங்கம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் உறுப்பினர் அங்கத்துவத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பல்கலைக்கழக உபவேந்தர்கள், வெளிநாட்டு இராஜதந்திகள், கொத்தலாவல பல்கலைக்கழக நிர்வாக சபை உறுப்பினர்கள், சிரேஷ்ட முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பல்கலைக்கழககல்வி, இராணுவ மற்றும் நிர்வாக ஊழியர்கள், பட்டதாரிகளின் குடும்ப உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.