இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஒக்டோபர் 16, 2024

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அதிமேதகு ஜூலி சுங் இன்று (அக்டோபர் 16) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தமான சந்தித்தார்.

வரவேற்பை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க தூதுவருடன் சுமுகமாக கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கை விமானப்படைக்கு புதிய விமானம் ஒன்றை நன்கொடையாக வழங்கியமைக்கு நன்றி தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், அவர்களுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தா, அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், லெப்டினன்ட் கேர்ணல் அந்தனி நெல்சன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின்  தலைமை அதிகாரி கொமாண்டர் ஷோன் ஜின் ஆகியோரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.