இலங்கை விமானப்படை தலதா மாளிகையில் வருடாந்த மருத்துவ முகாமை நடத்தியது

ஒக்டோபர் 24, 2024

இலங்கை விமானப்படை (SLAF) திங்கட்கிழமையன்று (அக்டோபர் 21) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் தனது வருடாந்த மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தியது. மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகா சங்கத்தினர், மாணவர் பிக்குகள் மற்றும் ஆலய ஊழியர்களின் நலனுக்காக 6வது முறையாக இம்மருத்துவ முகாம் நடத்தப்பட்டதாக விமானப்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண், உள்ளக மற்றும் தோல் மருத்துவம், கதிரியக்கவியல், அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் பெண்ணோயியல், மற்றும் ஆர்த்தடான்டிக்ஸ் ஆகிய துறைகளில் மருத்துவ நிபுணர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில், எழுநூறுக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் மற்றும் ஆலய ஊழியர்களும் மருத்துவ சேவைகளை பெற்றுக்கொண்டனர். மேலும், மருந்து வகைகள், ஆய்வக சேவைகள், ஈசிஜி மற்றும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள், பிசியோதெரபி மற்றும் சுகாதார ஆலோசனை சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், விமானப்படையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் (வைத்தியர்) லலித் ஜயவீர அவர்களின் மேற்பார்வையின் கீழ் இம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.