தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் 'இராணுவ கண்டுபிடிப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான அதன் பங்களிப்புகள்' எனும் தலைப்பில் விரிவுரையை நடத்தியது

ஒக்டோபர் 24, 2024

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS), "இராணுவ கண்டுபிடிப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான அதன் பங்களிப்புகள்" என்ற தலைப்பில் இன்று (அக்டோபர் 24, 2024) பாதுகாப்பு அமைச்சின் "நந்திமித்ர கேட்போர் கூடத்தில்" பொது விரிவுரை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

தேசிய புலனாய்வுப் பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க (ஓய்வு) இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் செயல்முறை பொறியியல் பேராசிரியரும் தேசிய புத்தாக்க நிறுவனத்தின் பிரதம புத்தாக்க அதிகாரியுமான சிரேஷ்ட பேராசிரியர் அஜித் டி அல்விஸ் சிறப்பு விரிவுரை ஆற்றினார்.

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் வேலைபார்க்கும் பணிப்பாளர் நாயகம் மற்றும் பதில் பணிப்பாளர் (ஆராய்ச்சி) கர்னல் நலின் ஹேரத் தொடக்கவுரையாற்றினார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு குறித்த முதன்மையான சிந்தனை அமைப்பான தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம், பாதுகாப்பு கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தையும் அதன் திறனையும் புரிந்துகொண்டு, தேசிய புத்தாக்க நிறுவனத்தின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த விரிவுரை ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், புதுமை அடிப்படையிலான கற்றல் (IBL) பற்றிய புரிதலை மேம்படுத்தவும், உள்நாட்டு கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றின் அவசியத்தை முன்னிலைப்படுத்தவும், புத்தாக்கத்தின் ஊக்குவிக்கவும் நோக்கத்தோடும் இது நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட பேராசிரியர் டி அல்விஸ் அவரது, சிறப்பான மற்றும் நுண்ணறிவுமிக்க விரிவுரையின் போது புத்தாக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தி, "நாம் மற்றொரு போரை நடத்த வேண்டும் - ஒரு பொருளாதாரப் போர்" என்று கூறினார். கல்வித்துறை, தொழில்துறை மற்றும் அரசாங்கத்திற்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம் புத்தாக்கங்களை ஊக்குவிப்பது தொடர்பில் அவர் விவரித்தார். மேலும் ஒரு வலுவான கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை உருவாக்குவதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஒரு நாட்டின் வளர்ச்சியை வடிவமைப்பதில் அறிவுச் சொத்துக்கள், சமகால சிந்தனைகள், கண்டுபிடிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் முக்கிய பங்கை பேராசிரியர் அல்விஸ் வலியுறுத்தினார். இஸ்ரேல் மற்றும் தென் கொரியா போன்ற உலகின் முன்னணி பொருளாதாரங் களை உதாரணமாக எடுத்துரைத்தார்.

அவர் தனது உரையில், இராணுவம், சிவில், பொருளாதாரம், சமூகம், டிஜிட்டல் மற்றும் உளவியல் அம்சங்களை உள்ளடக்கிய மொத்த பாதுகாப்பு அம்சம் குறித்தும் கவனம் செலுத்தி, தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான முழுமையான அணுகுமுறையின் அவசியத்தை மேட்கொடிட்டு காட்டினார். பேராசிரியர் டி அல்விஸ்,மேலும் உரையாற்றுகையில், நவீன அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் தேசிய அபிவிருத்தியை உறுதிசெய்து, மொத்த பாதுகாப்பின் அனைத்து பகுதிகளையும் வலுப்படுத்துவதில் புத்தாக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

விரிவுரையின் முடிவில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பேராசிரியர் பதிலளித்தார். மேலும், சிரேஷ்ட பேராசிரியர் டி அல்விஸுக்கு தேசிய புலனாய்வுப் பிரதானி நினைவு சின்னம் வழங்கி கௌரவித்தார்.

21 ஆம் நூற்றாண்டில் புதுமை என்பது பொருளாதார மீட்சிக்கு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. கல்வித்துறை வளர்ச்சியடைந்தாலும், நடைமுறை விளைவுகளுடன் ஆராய்ச்சி நடத்துவது ஒரு சவாலாக இருக்கின்றது. இருப்பினும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தேசிய வெற்றிக்கு இன்றியமையாதது. 2019 ஆம் ஆண்டின் 22 ஆம் எண் பாராளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் (NIA), ஒரு தேசிய கண்டுபிடிப்பு சூழலை உருவாக்கி நிலைநிறுத்துவதற்கு அமைச்சகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையை ஒருங்கிணைக்கும், பணியை மேற்கொண்டது. சமூக, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றின் பொருளாதார தாக்கம் பற்றிய புரிதலை மேம்படுத்துவது அதன் நோக்கங்கள் ஆகும்.

மேலும் இது தேசிய ஆராய்ச்சியை பொருளாதார இலக்குகளுடன் சீரமைப்பது, பொது மற்றும் தனியார் துறையின் புத்தாக்கத்திற்கு உள்ள தடைகளை நிவர்த்தி செய்வது மற்றும் குறிப்பாக தனியார் துறையில் புத்தாக்கத்திற்கான சூழல் அமைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி, சிறப்பு விருந்தினர்கள், முப்படை அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.