--> -->

பாதுகாப்பு செயலாளர், இராணுவ தலைமையகத்திற்கு
தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்

ஒக்டோபர் 28, 2024

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் தலைமையகத்திற்கு இன்று (அக்டோபர் 28) விஜயம் செய்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவியேற்றதன் பின்னர் இராணுவ தலைமையகத்திற்கு மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

பாதுகாப்புச் செயலாளரை இராணுவத்தின் இராணுவ தலைமை நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க வரவேற்றார்.

பாதுகாப்புச் செயலாளருக்கு வரவேற்பை வழங்கியதன் பின்னர், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே இராணுவத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதனையடுத்து, பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத் தளபதியும் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இராணுவ தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டிற்கான பங்களிப்பில், தேசிய பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயற்படும் அதேவேளை, கலவரங்கள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தொற்றுநோய்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தும் வகையில் இலங்கை இராணுவத்தின் முயற்சிகளை பாராட்டினார்.

இதனையடுத்து பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் துயகொந்தா (ஓய்வு) விஷேட பிரமுகர்கள் புத்தகத்தில் பாராட்டுக் குறிப்பையிட்டார். மேலும் தனது மேற்படி விஜயத்தை நினைவு கூரும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறி கொள்ளப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி, இராணுவத் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள், ஏனைய படையினர்கள் மற்றும் சிவில் பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.