--> -->

அவுஸ்திரேலியாவினால் பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 ரக விமானம் உத்தியோகபூர்வமாக இலங்கை விமானப்படையிடம் கையளிப்பு

ஒக்டோபர் 30, 2024

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இலங்கை விமானப்படையிடம் (SLAF) செவ்வாய்க்கிழமை (அக் 29) முறைப்படி கையளிக்கப்பட்டது.

விமானம் கைய்யாளிப்புக்கான ஆவணங்களில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கையெழுத்திட்டு விமானத்தை ஏற்றுக்கொண்டதாக விமானப்படை ஊடகம் தெரிவித்துள்ளது.

பிராந்திய செயலாக்கத்திற்கான உதவி செயலாளர் திருமதி ஷான் ஸ்ட்ரக்னெல் தலைமையிலான ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் குழுவில் பிராந்திய செயலாக்க பணிக்குழுவின் இயக்குனர் திருமதி ஜோடி லூயிஸ் மற்றும் முதல் செயலாளர் மற்றும் ஆஸ்திரேலிய எல்லைப் படை ஒருங்கிணைப்பாளர் திருமதி லலிதா கபூர் ஆகியோர் அடங்கினர்.

இந்நன்கொடை இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக அமையும்.

மேலும் இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமீபத்திய பாதுகாப்பு தொடர்பான உபகாரங்கள்கையளிப்பு பிராந்திய ஸ்திரத்தன்மையை பேணுவதில் அவற்றின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் விமானப்படையின் பிரதம அதிகாரி, அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் அமண்டா ஜோன்ஸ்டன், மற்றும் விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.