பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான
மத்திய நிலையத்திற்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்
ஒக்டோபர் 31, 2024
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஹோமாகம, பிட்டிப்பனவில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்திற்கு (CDRD) நேற்று (அக் 30) ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டார்.
நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இமால் அஸ்ஸலஆரச்சி, பாதுகாப்புச் செயலாளரை வரவேற்றார். இந்த விஜயத்தின் போது, சிடிஆர்டியின் செயல்பாடுகள், இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப உபகரணங்கள், அதன் தற்போதைய திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் அவை தொடர்பில் பாதுக்காப்பு செயலாளர் நிலையத்தின் அதிகாரிகளுடன் மேலும் கலந்துரையாடினார்.
விஜயத்தின் நிறைவில், மேஜர் ஜெனரல் அஸ்ஸலஆரச்சி பாதுகாப்புச் செயலாளருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தார்.
ஆராய்ச்சி நிலையத்திற்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை குறிக்கும் வகையில் விசேட அதிதிகள் புத்தகத்தில் பாதுகாப்பு செயலாளர் கையொப்பமிட்டார்.
இராணுவத்திற்கு உலகத் தரம் வாய்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளத்தை உருவாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட சிடிஆர்சி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படுகிறது.
நாட்டிற்கு குறைந்த செலவு மற்றும் புத்தாக்க தொழிநுட்ப தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதில் இந்த நிறுவனம் முன்னோடியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தா, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் சிடிஆர்சியின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.