ஊடக அறிக்கை

நவம்பர் 01, 2024

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தைச் சேர்ந்தவர்களை (சூரியவெவ) ஏற்றி சென்ற பஸ் விபத்து தொடர்பில்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) குழுவினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று துன்ஹிந்த - பதுளை வீதியில் அம்பகாஸ் சந்தியில் (நவம்பர் 01) காலை 0745 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த பஸ்ஸில் பயணித்த 42 பேர் கொண்ட குழுவில் கொத்தலாவல பல்கலைக்கழக39வது  ஆட்சேர்ப்பின் 36 மாணவர்கள், 3 விரிவுரையாளர்கள், குழுவிற்குப் பொறுப்பான பயிற்றுவிப்பாளர், பஸ்ஸிற்குப் பொறுப்பான மூத்த இராணுவ வீரர் மற்றும் பஸ் ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர்.

இந்த விபத்தில் இரண்டு மாணவிகள் உயிரிழந்ததுடன் மேலும் 40 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இரு மாணவர்களும் குருநாகல் மற்றும் நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைத்தியசாலை வட்டாரங்களின்தகவலின்படி, ஏழு (7) நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்தில் உயிரிழந்த இரு மாணவர்களின் இறுதிக்கிரியைகளை பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையுடன் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக த்தின் உபவேந்தர் தெரிவித்தார்.

இதேசமயம், பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை விமானப்படையின் பெல் 412 ஹெலிகொப்டர் தியத்தலாவ விமானப்படை தளத்தில் நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு ஏற்றிச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலின்படி, பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அமைச்சு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடையவும்  பிரார்த்திக்குகிறது.

மேலும், காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு துரித நடவடிக்கை எடுத்த பிரதேசவாசிகள் அனைவருக்கும் பாதுகாப்பு அமைச்சு, உடனடியாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய டாக்டர் பாலித ராஜபக்ஷ வைத்தியசாலை ஊழியர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.