மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்

நவம்பர் 06, 2024

•    NBRO நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (நவம்பர் 06) காலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரக்கூடும்.

மத்திய, சப்பிரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நிலை 2 (ஆம்பர்) மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும் கேகாலை மாவட்டத்தின் கேகாலை, தெஹியோவிட்ட, யட்டியந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, ருவன்வெல்ல, வரகாபொல, தெரணியகல, அரநாயக்க மற்றும் கலிகமுவ பிரதேச செயலக பிரிவுகளுக்கு நிலை 2 (ஆம்பர்)  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு நிலை 1 (மஞ்சள்) மண்சரிவு அபாய  எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.