ஊடக அறிக்கை

நவம்பர் 11, 2024
  • ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கையர்கள் மியன்மாரில் உள்ள இணைய மோசடி மையங்களுக்கு கடத்தப்படுவது குறித்து NAHTTF எச்சரிக்கை விடுத்துள்ளது.

மியான்மரில் உள்ள இணைய மோசடி மையங்களுக்கு  பல்வேறு வடிவங்களில் ஆட்சேர்ப்பது அதிகரித்து வருவது குறித்து தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தங்கியுள்ள இலங்கையர்கள் குழுக்களாக மியான்மரில் உள்ள இணைய மோசடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறவர்களில் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்  NAHTTF க்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.

வெளிநாடுகளில் அதிக ஊதியம் பெறும் தகவல் தொழில்நுட்ப தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதாக கூறி கடத்தல்காரர்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை கவர்ந்திழுப்பது சமீபத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மனித கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்ப துறைகளில் அதிக ஊதியம் பெறும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து தொழிலாளர்களை ஈர்க்கின்றனர்.

இந்த நபர்கள் வேலைக்கான நேர்காணல் என்ற போர்வையில் துபாய் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மியான்மரில் உள்ள இணைய மோசடி மையங்களில் சட்டவிரோதமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மேலும் இந்த மோசடி மையங்களில் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் கொடூரமான உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும்  தெரியவந்துள்ளது.

"சட்டவிரோத வெளிநாட்டு குடியேற்ற வழிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம், ஏனெனில் அவை மிகவும் ஆபத்தானவை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறுகின்ற செயலும் ஆகும். வேலை தேடுபவர்கள் வருகை விசாவில் (Visit Visa) மற்ற நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று NAHTTF எச்சரிக்கை விடுத்துள்ளது.

NAHTTF பொதுமக்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது:
•  வெளிநாடுகளுக்கு செல்ல அங்கீகரிக்கப்பட்ட சட்ட ரீதியான பாதுகாப்பான வழிகளை பின்பற்றவும்.
•  விழிப்புடன் இருங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கடத்தல் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கவும்.
• பாதிப்புக்குள்ளாக்கூடிய ஆபத்தில் இருக்கக்கும் வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மற்றும் இலங்கையில் உள்ள அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் ஆபத்திலிருந்து அவர்களை காப்பாற்றலாம்.

NAHTTF, பின்வரும் தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைப் பற்றி தெரியப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது. அத்துடன் தகவலாளிகளின் இரகசியத்தன்மையை பேனவும் உறுதியளிக்கிறது.

•    0112102570/ 076 844 7700
•    nahttfsrilanka@gmail.com

உங்களின் விழிப்புணர்வு இந்த ஆபத்தான கடத்தல் வலையமைப்புகளை முறியடித்து உயிர்களைக் காப்பாற்ற உதவும். மேலும் தகவல்களின் இரகசியத்தன்மை பேணப்படும் என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.