எங்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க மரபுவழி இராணுவ முன்மாதிரிகளை
தாண்டி சிந்திக்கக்கூடிய தலைவர்கள் தேவை - பாதுகாப்பு செயலாளர்
நவம்பர் 18, 2024
"இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், காலநிலை மாற்ற தாக்கங்கள், பொருளாதார பாதுகாப்பு மற்றும் தகவல் போர் போன்றவை பாரம்பரிய இராணுவ சவால்களுடன் குறுக்கிடும் ஒரு சகாப்தத்தில் நாங்கள் வாழ்கிறோம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், நமது பிரதேசம், உலகளாவிய கடல் வர்த்தகம் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் மிக்க சந்தியில் அமைந்திருக்கிறது. எங்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க மரபுவழி இராணுவ முன்மாதிரிகளை தாண்டி சிந்திக்கக்கூடிய தலைவர்கள் தேவை”.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா` (ஓய்வு) இன்று (நவம்பர் 18) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை NDC இன் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா வரவேற்றார்.
பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “அடுத்த ஆண்டு முதல் NDC யில் சிவில் நிர்வாக அதிகாரிகளுக்கும் கற்க வாய்ப்பளிக்கப்படும். இது, தேசிய பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு, அனைத்து நிர்வாகத் துறைகளின் ஈடுபாடும் தேவை என்று பிரபலம் பெற்று வரும் கருத்தை பிரதிபலிக்கிறது. தேசியப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் அரசு அதிகாரிகளும் அடுத்த பாடத்திட்டத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்´ என்றார்.
இந்த விழாவில் பாதுகாப்புச் செயலாளர் 33 இலங்கையின் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் 08 வெளிநாட்டு அதிகாரிகளுக்கும் பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரி நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வு கற்கைகளுக்கான மிக உயர்ந்த அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், KDU உபவேந்தர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், வெளிநாட்டு இராணுவ உயரதிகாரிகள், NDC உறுப்பினர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலரும் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.