வருடாந்த ‘பொப்பி தின’ விழா ஜனாதிபதி தலைமையில்
நவம்பர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது

நவம்பர் 21, 2024

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் (SLESA) மற்றும் அதன் ஆயுதப்படை நினைவு  தின பொப்பி குழுவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டும் பொப்பி தின விழா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில், கௌரவ அதிதிகளின் பங்குபற்றுதலுடன், கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைந்துள்ள யுத்த வீரர் நினைவு தூபியில் நவம்பர் 24 அன்று நடைபெறவுள்ளது.

முதலாம் உலகப் போரின் முடிவில் உயிர்நீத்த போர்வீரர்கள் மற்றும் ஊனமுற்றவர்களைக் கௌரவிக்கும் வகையில் ‘பொப்பி தின’ நினைவு நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இந்த நினைவேந்தல் நடத்தப்படுவது வழக்கம்.

ஓய்வுபெற்ற இலங்கை ஆயுதப்படை உறுப்பினர்களிடையே நட்புறவு மற்றும் சகோதரத்துவத்தை பேணும் நோக்கத்தோடு 1944 இல் SLESA நிறுவப்பட்டது. தற்போது, SLESA' ஆயுதப்படை நினைவு பொப்பிகுழுவின் கீழ் நாடளாவிய ரீதியில் 44 துணைச் சங்கங்களும் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவில் தலா ஒரு குழுவும் உள்ளன. SLESAவில் சுமார் 50,000 ஓய்வுபெற்ற முப்படை வீரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடாந்த பொப்பி தின நிகழ்ச்சிகளின் ஓர் அங்கமாக பொப்பி மலர்கள், மாலைகள் மற்றும் ஸ்டிக்கர்கள் விற்கப்படுகின்றன. பொது மக்கள் இவற்றை கொள்வனவு செய்வதன் மூலம் ஓய்வு பெற்ற படைவீரர்களுக்கு தமது ஆதரவை வழங்க முடியும். மேலும் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் ஓய்வுபெற்ற போர்வீரர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும்.

தற்போது, கட்டானை மற்றும் கட்டுகஸ்தோட்டையில் இரண்டு ஓய்வு இல்லங்கள் SLESAவினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அங்கு தேவையுடைய  30 ஓய்வு பெற்ற படைவீரர்களுக்கு தங்குமிடம் மற்றும் பராமரிப்பு வழங்கப்படுகிறது. மேலும், மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், மூக்குக்கண்ணாடிகள் மற்றும் செவிப்புலன் கருவிகளைப் பெற்றுக்கொள்ளவும் பிற மருத்துவத் தேவைகளுக்கு அத்துடன் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் SLESAவினால் நிதி உதவி அளிக்கப்படுகின்றது.