நாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடருக்கூடும்

நவம்பர் 26, 2024
  • தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டிட்கு அருகில் நகராக கூடிய அபாயம்.
  • பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ முப்படைகளின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்.
  • கடற்படையின் நிவாரணக் குழுக்கள் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
  • வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
  • வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை (நவம்பர் 26) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கைக்கமைய, இக்காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நேற்று (நவம்பர் 25) இரவு 11.30 மணியளவில் மட்டக்களப்புக்கு 290 கிலோமீற்றர் மற்றும் திருகோணமலைக்கு 410 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கே நிலைகொண்டுடிருந்தது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு மிக அருகில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணித்தியாலத்தில் அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேசத்தில் 191 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வட மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டை சூழவுள்ள கடல் கொந்தளிப்பாகவும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடியதால் அதிக கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.

இதேவேளை, மகாவலி ஆறு மற்றும் ஹெட ஓயா ஆற்றுப் படுக்கைகளை சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திம்புலாகலை, ஈச்சிலம்பற்று, ஹிங்குராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவிலை, தமன்கடுவ, தம்பலகாமம், வெலிகந்த பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளிட்ட மகாவலி ஆற்றின் தாழ்வுப் பகுதிகளுக்கு இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹெட ஓயாவின் சியம்பலாண்டுவ மற்றும் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவு பகுதிகளிலுள்ள தாழ்வு பகுதிகளுக்கும் இவ்வெச்சரிக்கை பொறுந்தும்.

பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 1 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.