பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனர்த்த நிலைமை நிவாரண நடவடிக்கைகளை பார்வையிட மன்னார் விஜயம்
நவம்பர் 27, 2024பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மன்னார் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்ட நேற்று (நவம்பர் 26) மாலை அவசர விஜயமொன்றை மேற்கொண்டார்.
பிரதி அமைச்சர் ஜயசேகர, இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், மாவட்ட செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகளுடன் தற்போது நிலவிவரும் அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்ததினால் இப்பிரதேசத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.
அனர்த்ததினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மன்னார் மாவட்டமும் ஒன்று பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிவாரண நிலையங்களை பார்வையிட்ட அவர், அங்குள்ள நலன்புரி ஏற்பாடுகளில் அதிக கவம் செலுத்தினார். மேலும், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாதிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்கள் 25 நிவாரண நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் உதவியுடன் அவர்களின் தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது நிலவிவரும் நிலைமை மேலும் மோசமாகும் பட்சத்தில் முன்னெடுக்கப்படும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது தொடர்பில் பிரதேசத்தில் உள்ள DMC மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகளுடன் இன்று (27) காலை வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சர் தலைமையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், உயிர் சேதங்களைத் தடுக்க மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன்பின்னர் இன்று (நவ.27) அனர்த்த பாதுகாப்பு பிரதியமைச்சர் தலைமையில் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்ட விசேட ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.
தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் அவர்களுக்கு நிவாரண நிலையங்களில் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதியமைச்சர் விளக்கமளித்தார். நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு திட்டம் குறித்தும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின்அறிவுறுத்தலுக்கமைய, முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார திணைக்களம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவை பணியாளர்களின் ஒன்றிணைந்த நடவடிக்கையின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகவும் முறையாகவும் தேவையான நிவாரணங்களை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும், மண்சரிவு அல்லது ஏனைய இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு விசேட அவதானத்துடன் இருக்குமாறும், அவ்வாறான சந்தர்ப்பத்தில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை பின்வரும் பிரத்யேக அவசர தொலைபேசி இலக்கங்களின் ஊடாக உடனடியாகத் தொடர்புகொண்டு அது தொடர்பில் அறிவிக்குமாறும் கேற்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள் - 0112 136 222, 0112 670 002 மற்றும் 117.