INSS ன் பொருளாதார பாதுகாப்பிற்கான இலங்கையின் மூலோபாய
இருப்பிடத்தை பயன்படுத்தல் தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல் நடைபெற்றது

டிசம்பர் 06, 2024

“இந்து சமுத்திரத்தில் அதன் மூலோபாய இருப்பிடத்தின் ஊடாக இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் வட்டமேசை கலந்துரையாடல் ஒன்று தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தினால் (INSS) டிசம்பர் 5ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடத்தப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பொருளாதார வளர்ச்சி மற்றும் மீள்திறனுக்காக அதன் தனித்துவமான புவியியல் அமைவிடத்தை பயன்படுத்துவதற்கான இலங்கையின் திறனை ஆராய்தல்  தொடர்பில் கலந்துரையாட பல நிபுணர்கள் இக்கலந்துரையாடலுக்கு கலந்துக் கொண்டனர்.

INSS இன் மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஊடகப் பணிப்பாளர்/பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்னல் நளின் ஹேரத் பிரதம அதிதியையும் சிறப்பு பேச்சாளர்களையும்  வரவேற்றார்.

சர்வதேச பொருளாதார அபிவிருத்தி குழுமத்தின் சிரேஷ்ட வருகைதரும் விரிவுரையாளர் கலாநிதி கணேசன் விக்னராஜா அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட இந்த அமர்வில், இலங்கையின் மூலோபாய மற்றும் பொருளாதாரப் முன்னேற்றம் தொடர்பில் அறிவை பங்குபற்றிய  நிபுணர்கள் பகிர்ந்துக்கொண்டனர். ரியர் அட்மிரல் YN ஜயரத்ன (ஓய்வு) துறைமுக திறன்களை மேம்படுத்துவதன் மூலம் கடல்சார் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதன் அவசியத்தை மற்றும் செயல்திறன் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் அவசியத்தை எடுத்துரைத்ததோடு இது, உலக வர்த்தகத்தில் இலங்கையின் பங்கை வலுப்படுத்தும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.   

லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ரவிநாத பி.ஆரியசிங்க, உலக வல்லரசுகளுடனான உறவுகளை சமநிலைப்படுத்துதல் மற்றும் பிராந்திய பொருளாதார முயற்சிகளில் பங்குகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பொருளாதார பாதுகாப்பை ஊக்குவிக்கும் அதே வேளை, மூலோபாய புவிசார் அரசியல் வழிசெலுத்தல் பிராந்தியத்தில் இலங்கையின் நிலையை எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. பிங்குமல் சண்டிக தேவரதந்திரி, உலகளாவிய அரசியல் மாற்றங்களை வழிநடத்துவதில் இலங்கை எதிர்கொள்ளும் புவிசார் அரசியல் சவால்கள் பற்றிய ஆழமான பகுப்பாய்வை வழங்கினார். இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கத்தின் தலைவர் திரு. நிஷான் மெண்டிஸ், பிராந்திய இணைப்புகளை விரிவுபடுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை முன்மொழிந்தார். வான், கடல்சார் மற்றும் டிஜிட்டல் வலையமைப்புகளை ஒருங்கிணைத்து, பொருளாதார நெகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில், இலங்கையை ஒரு விரிவான பிராந்திய மையமாக எவ்வாறு நிலைநிறுத்த முடியும் என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார்.

முக்கியமான கிழக்கு-மேற்கு கடல்சார் வர்த்தகப் பாதைகளில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தின் முக்கியத்துவத்தை இந்தக் கலந்துரையாடல் அடிக்கோடிட்டுக் காட்டியது. இலங்கையின் பொருளாதார பாதுகாப்பை மேம்படுத்த ஒருங்கிணைந்த தேசிய மூலோபாயத்தின் அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்தினர். துறைமுக திறன்களை மேம்படுத்துவதன் மூலம் கடல்சார் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல் மற்றும் செயல்திறன் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல் உள்ளிட்ட முக்கிய உத்திகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இலங்கையை ஒரு விரிவான பிராந்திய மையமாக நிலைநிறுத்துவதற்கு வான், கடல் மற்றும் டிஜிட்டல் வலையமைப்புகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் பிராந்திய இணைப்பை விரிவுபடுத்துவது வலியுறுத்தப்பட்டது. மேலும் நிலையான மீன்பிடி, கடல் சுற்றுலா மற்றும் கடல்சார் ஆற்றல் ஆய்வு போன்ற நிலையான நீல பொருளாதார முயற்சிகளை வளர்ப்பது, பொருளாதார வழிகளை பல்வகைப்படுத்துவதற்கு இன்றியமையாததாக அங்கீகரிக்கப்பட்டது. இறுதியாக, மூலோபாய புவிசார் அரசியல் வழிசெலுத்தல், உலகளாவிய சக்திகளுடன் உறவுகளை சமநிலைப்படுத்துதல் மற்றும் BIMSTEC மற்றும் IORA போன்ற பிராந்திய பொருளாதார அமைப்புகளில் பங்கேற்பது, இலங்கையின் நீண்டகால பொருளாதார நெகிழ்ச்சி தன்மையை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமானவையாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

வலுவான கொள்கை சீர்திருத்தங்கள், பொது-தனியார் கூட்டு முயற்சிகள் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு முதலீடுகள் செய்தல்,  மற்றும் நீண்டகால வளர்ச்சி மற்றும் நெகிழ்ச்சி தன்மையை இயக்க புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தல் அவசியம் தொடர்பில் கலந்துக்கொண்ட நிபுணர்கள் அழைப்பு விடுத்தனர்.