இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமனம்

டிசம்பர் 30, 2024

இலங்கை இராணுவத்தின் (SLA) 25 வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ RSP, psc, IG, MA in SSS (USA), MSc in SSS (KDU) அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியின் பழைய மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோ 1989 ஆம் ஆண்டு கெடட் அதிகாரியாக தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கினார். தியத்தலாவ இலங்கை இராணுவ கலாசாலை (SLMA) மற்றும் இந்தியாவின் டெஹ்ராடூனில் உள்ள இந்திய இராணுவ கலாசாலை (IMA) ஆகியவற்றில் அடிப்படைப் பயிற்சியைத் தொடர்ந்து, 1990 இல் இலங்கை பீரங்கி படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்டாக அதிகாரம் பெற்றார்.

லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோ பல இராணுவ உயர் பயிற்சி பாடநெறிகளில் பயின்று தேர்ச்சிப் பெற்றுள்ளார். மேலும் இந்தியா மற்றும் சீனாவில் இராணுவ உயர் பயிற்சிகளை பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (NDU) மூலோபாய பாதுகாப்பு ஆய்வுகளில் முதுகலைப் பட்டத்தையும், ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும் இலங்கை இராணுவ கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (தற்போது பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி) பட்டதாரியும் ஆவார்.

லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோ பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளதுடன் போர் நடவடிக்கைகளிலும் பங்குபற்றியுள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களின் போது மூன்று முறை காயப்பட்டுள்ளார். அவருக்கு 'ரண சூர பதக்கம' (RSP) விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இலங்கை பீரங்கிப்படையின் 18வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, 661 காலாட்படை படையணியின் கட்டளை அதிகாரி, 663 காலாட்படை படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பூநகரியிலுள்ள 66 காலாட்படை பிரிவின் கட்டளை அதிகாரி உட்பட பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். மேலும், மத்திய பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படைக்கு கட்டளை அதிகாரியாகவும், இலங்கை பீரங்கி படையணியின் கர்னல் கட்டளைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோ இராணுவத் தலைமையகத்தில், வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளராக பதவி வகித்து பின்னர் இலங்கையின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதியாக பணியாற்றியுள்ளார். இராணுவ தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், இராணுவத்தின் துணை தலைமை அதிகாரியாக பதவி வகித்தார்.

லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோ மற்றும் திருமதி. ஸ்வென்ட்ரினி ரொட்ரிகோ தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.