இலங்கை முக்கிய சர்வதேச அணு சோதனை தடை பயிற்சியை நடத்த உள்ளது
ஜனவரி 03, 2025விரிவான அணுகுண்டு-சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) கீழ் ஒருங்கிணைந்த களப் பயிற்சி - 2025 (IFE25) ஐ நடத்த இலங்கை தயாராக உள்ளது. இது On Site Inspection (OSI) மையமாகக் கொண்ட ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள IFE25, நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் இராஜதந்திர நன்மைகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் வியாழக்கிழமை (ஜனவரி 02) மேலதிக செயலாளர் - பாதுகாப்பு மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகளுடன் இது தொடர்பான ஆயத்த கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த பயிற்சி நூற்றுக்கணக்கான சர்வதேச பிரதிநிதிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் 10 மில்லியன் யூரோக்கள் வருவாய் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெரிய அளவிலான பங்கேற்பு உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல் மேம்பட்ட மற்றும் பன்னாட்டு நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் இலங்கையின் திறனை அடிக்கோடிட்டுக் காட்டும்.
IFE25 ஐ இங்கு நடத்துவதன் மூலம், உலகளாவிய நிராயுத முன்முயற்சிகள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டு முயட்சிகளுக்கு இலங்கையின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுவதாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.