இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு
பிரதி அமைச்சரை சந்தித்தார்

ஜனவரி 10, 2025

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மந்தீப் சிங் நேகியுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) இன்று (ஜனவரி 10) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ஜனவரி 26 ஆம் திகதி இந்தியாவின் 76 வது குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்குபற்ற பிரதி அமைச்சருக்கு கேப்டன் முகுந்தன் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார். இச்சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட இரு நாட்டு  மக்களுக்கிடையிலான வலுவான தொடர்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதி அமைச்சர், இந்தியாவின் தொடர்ச்சியான இராணுவ உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் ஆதரவை பிரதி அமைச்சர் பாராட்டி, இப்பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்த சந்திப்பு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் ஒத்துழைப்பு உணர்வை வலுப்படுத்துவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.