பதில் பாதுகாப்பு அமைச்சர் உயிர்நீத்த போர் வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஊனமுற்ற வீரர்களின் நலன்புரி பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

ஜனவரி 18, 2025

பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில்  நேற்று (ஜனவரி 17) உயிர்நீத்த போர் வீரர்கள் குடும்பங்களின் மற்றும் ஊனமுற்ற வீரர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக  கூட்டம் ஒன்று நடைபெற்றது.
 
இவ்விடயம் தொடர்பில் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட கூட்டத்தின் பின் இதுவரைக்கும்  ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் மற்றும் உயிர்நீத்த  மற்றும் ஊனமுற்ற வீரர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினைகளை திறம்பட தீர்ப்பதற்கான ஒரு முறையான அணுகுமுறையின் முக்கியத்துவம் இங்கு வலியுறுத்தப்பட்டது.   

பதில் அமைச்சர், போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் கூட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை அக்குழு மீண்டும் உறுதிப்படுத்தியது.

கூட்டத்தைத் தொடர்ந்து, எடுக்கப்பட்டு வரும் நலன்புரி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்த ஒரு ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது. அங்கு, தற்போதைய அரசாங்கம் இந்தக் குடும்பங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், உடனடி மற்றும் நடைமுறை தீர்வுகள் காண்பதன் மூலம் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு அர்ப்பணிப்புடன்  செயல்படுகிறது என்பதை அமைச்சர் வலியுறுத்தினார்.

கொழும்பில் உள்ள பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்  கூட்டத்தில், நலன்புரிக் குழுவின் தலைவராக பணியாற்றும் பாதுகாப்பு அமைச்சின்   மேலதிக செயலாளர்-பாதுகாப்பு, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக  செயலாளர், ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர், ஓய்வூதியத் திணைக்களத்தின் இயக்குநர், முப்படைகளின் பிரதம அதிகாரிகள், முப்படைகளின்  டர்புடைய இயக்குநர்கள் மற்றும் முப்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.