மழையுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் - வானிலை ஆராய்ச்சி நிலையம்

ஜனவரி 20, 2025
  • மண்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன
  • அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு முப்படை நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

வானிலை ஆராய்ச்சி நிலையத்தினால் இன்று (ஜனவரி 20) காலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கைக்கமைய தற்போது நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்.

இவ்வறிக்கைக்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டில் பரவலாக பெய்துவரும் தொடர்ச்சியான மழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும். வடக்கு மாகாணத்திலும், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபட்ச மழைவீழ்ச்சியான 178.0 மி.மீ மழை திருகோணமலையில் பதிவாகியுள்ளது.

மல்வத்து ஓயா, கலா ஓயா மற்றும் கல் ஓயாவின் கீழ் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த காற்று (மணிக்கு 30-40 கி.மீ) வீசக்கூடும்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மாத்தளை மாவட்டத்தில் உள்ள ரத்தோட்டை, யடவத்தை, வில்கமுவ மற்றும் உகுவெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தில் உடுதும்பர மற்றும் தொலுவ பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் 2 ஆம் நிலை (ஆம்பர்) நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை பதுளை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு 1 ஆம் நிலை (மஞ்சள்) நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவ முப்படை நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை (SLN) ஊடக அறிக்கைகளின்படி, கடற்படை வெள்ள நிவாரண குழுக்கள், உயிர்காக்கும் உபகரணங்களுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.