நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏட்பட்டுள்ள அனர்த்த நிலைமை
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது
ஜனவரி 21, 2025
- அனர்த்தங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டு தொகை 250,000 ரூபாயிலிருந்து 1 மில்லியன் ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது
நாட்டை பாதித்துள்ள மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமை குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இன்று (ஜனவரி 21) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது, தற்போதைய நிலவரத்திற்கமைய, 18 மாவட்டங்களில் உள்ள 127 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 5,821 குடும்பங்களைச் சேர்ந்த 19,032 மக்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். இவர்கள் 17 நிவாரண நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உலர் உணவு பொருட்கள் மற்றும் சமைத்த உணவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோசமான காலநிலை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 10 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 438 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 25 சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் இரண்டு முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வானிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 மணி நேர நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பிற நிவாரண அமைப்புகள் அனைத்தும் அனர்த்த நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மேலும், பல குளங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் நிரம்பி வழிவதால், பாதிக்கப்படக்கூடிய கரைகளை வலுப்படுத்தும் பணிகளும் நீர்ப்பாசன பொறியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், அனர்த்த நிவாரண சேவைகளுக்காக 30 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களுக்கு தினசரி உணவுப் பங்கீட்டு கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, ஒருவருக்கு ரூ.1,800, தொடக்கம் குடும்ப அளவைப் பொறுத்து ரூ. 2,400, ரூ. 2,800, ரூ. 3,200, மற்றும் ரூ. 3,600 என இத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனர்த்தங்களினால் ஏற்படும் உயிரிழப்புக்கான இழப்பீட்டு தொகை 250,000 ரூபாயிலிருந்து ரூ. 1 மில்லியன் ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கைகளுக்கமைய, தற்போதைய காலநிலை எதிர்வரும் நாட்களின் தணிவடையும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலைமை குறித்து செய்யப்பட்ட முன்னறிவிப்புகளுக்கமைய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயங்கலினால் ஏட்படக்கூடிய சேதங்களைக் குறைக்க உதவியுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக செயல்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
அனர்த்த தயார்நிலைக்கான அரசாங்க வழிமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்றும், அந்த செயல்முறையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அனர்த்த நிவாரணக் குழுக்கள் உள்ளிட்ட தொடர்புடைய அரச நிறுவனங்களின் பொறுப்பு என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பாதுகாப்பு செயலாளர், வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வானிலை ஆராய்ச்சி நிலையம், பாதுகாப்பு அமைச்சு, மற்றும் முப்படை அதிகாரிகள் பலரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.