26வது ASEAN பிராந்திய மன்ற பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / நிறுவனங்களின் தலைவர்களின் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

ஜனவரி 26, 2025
  • KDU ARF- HDUCIM சர்வதேச மன்ற கூட்டம் 22 முதல் 25 வரை Galle Face ஹோட்டலில் நடத்தது

26வது ASEAN பிராந்திய மன்ற பாதுகாப்பு பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / நிறுவனங்களின் தலைவர்களின் கூட்டம் (ARF HDUCIM) ஜனவரி 23 ஆம் திகதி கொழும்பு Galle Face ஹோட்டலில் ஆரம்பமாகியது. ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) இந்த ஆண்டு நிகழ்வை நடத்தியது. பங்கேற்கும் நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், கட்டளை தளபதிகள் மற்றும் இயக்குநர்கள் தங்கள் நிறுவனங்களின் பிரதிநிதி குழுக்களை வழிநடத்தி சமூகமளித்திருந்தனர். உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு கல்வி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர கற்றல் அபிவிருத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட 03 முக்கிய அமர்வுகள் மற்றும் பல இருதரப்பு கூட்டங்கள் இந்த மன்றத்தில் இடம்பெற்றன.

இந்த ஆண்டு "மாற்றத்தின் சகாப்தத்தில் பாதுகாப்பு கல்வி" என்ற கருப்பொருளைக் கொண்டு நடத்தப்பட்டது. இது அதிகரித்து வரும் சிக்கலான உலகளாவிய பாதுகாப்பு சூழலில் பாதுகாப்பு கல்வி அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை பிரதிபலிப்பதாக அமையும். கூட்டத்தில் "பாதுகாப்பு தலைமைத்துவத்தில் முக்கியமான தொழில்நுட்பங்களின் செல்வாக்கு", "காலநிலை மாற்றம் மற்றும் முறையான அபாயங்களுக்கு பதிலளித்தல்" மற்றும் "ஆற்றல் மாற்றங்களுக்கு ஒருங்கிணைந்த பதில் மூலம் எரிசக்தி பாதுகாப்பை அடைதல்" ஆகிய துணை தலைப்புகளிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 01 ஆம் நாள் தொடக்க நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, ASEAN னில் பாதுகாப்பு கல்வி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடக்க அமர்வில் KDU வின் வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவின் இயக்குநர் ஜெனரல், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம், விமானப்படைத் தளபதி, பொலிமா அதிபர் மற்றும் சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் தலைவர், KDU பல்கலைக்கழக துணைவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார மற்றும் இணைத் தலைவர் கம்போடிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் - துணை ரெக்டர் - லெப்டினன்ட் ஜெனரல் மோனி வார் ஆகியோர் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களைப் வரவேற்றனர்.

கூட்டத்தின் முதலாவது அமர்வில் பாதுகாப்புத் தலைமைத்துவ துறையில் முக்கியமான தொழில்நுட்பங்களின் செல்வாக்கின் கீழ் உள்ள நுண்ணறிவுகளை மன்றம் ஆராய்ந்தது.

மன்றத்தின் இரண்டாம் நாள், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் கலந்து சிறப்பித்தார்.

இரண்டாம் நாளில் முறையான அபாயங்கள் மற்றும் உலகளாவிய சவால்களை நிவர்த்தி செய்தல் மற்றும் உலகளவில் நிலையான மற்றும் பாதுகாப்பான எரிசக்தி உத்திகளை உறுதி செய்வதில் எரிசக்தி மாற்றங்கள் மற்றும் அவற்றின் முக்கிய பங்கு தொடர்பில் கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன.

இரண்டு நாட்களிலும், பாதுகாப்பு கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஆழமான உறவுகள் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கான இருதரப்பு கூட்டங்களும் இடம்பெற்றன. பங்கேற்கும் நாடுகள், கருத்துக்களையும் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக்கொள்வதன் மூலம், வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள தங்கள் கூட்டு திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், லாவோஸ் , தாய்லாந்து, மியான்மர், வியட்நாம், கம்போடியா, திமோர் லெஸ்டே, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், நியூசிலாந்து, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடல்களில் ஈடுபாட்டுடன் கலந்துக்  கொண்டமை  தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகளை அடைவதற்கான கூட்டு உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக அமைந்தது. சர்வதேச பாதுகாப்பு கல்வியில் புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான மன்றத்தின் உறுதிப்பாட்டை இந்த பன்முகத்தன்மை கொண்ட பங்கேற்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் இரண்டாம் நாள் விழாவில் கலந்து கொண்டனர்.

இறுதிநாள் நிறைவு விழாவுடன் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது. KDU  துணைவேந்தர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை 27வது ARF HDUCIM இன் கூட்டத்தின்  தலைவரான கம்போடிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை ரெக்டரான லெப்டினன்ட் ஜெனரல் மோனி வாரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். லெப்டினன்ட் ஜெனரல் மோனி வார், தத்துறையில் அடுத்த கூட்டத்திற்கான தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டும் வகையில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.