போரில் உயிரிழந்த போர் வீரர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்த போர் வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் தொடர்பில் மதிப்பாய்வு கூட்டம் நடைபெற்றது

ஜனவரி 29, 2025

நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் சலுகைகள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான கூட்டமொன்று, இன்று (ஜனவரி 28) பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குழு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன், அமுலிலுள்ள நலன்புரி நடவடிக்கைகலின் தற்போதைய நிலை குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

அத்துடன் முந்தைய கூட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்கள் பிரதி அமைச்சருக்குத் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகளுக்கு சாத்தியமான மற்றும் விரைவான தீர்வுகளை வழங்குவதற்கும், முறையான வழிமுறையின் மூலம் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்- பாதுகாப்பு தலைமையிலான ஒரு குழு சமீபத்தில் நியமிக்கப்பட்டது. அக் குழுவின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் கூட்டு செயல்முறையின் மூலம் போரில் மறைந்த போர்வீரர்களின் குடும்பங்களின் நலனை உறுதி செய்யவும் அவர்களின் தேவைகளுக்கு மிகவும் பயனுள்ள தீர்வுகளை வழங்கவும் முடியும்.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்- பாதுகாப்பு, ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர், ஓய்வூதியத் திணைக்களத்தின் இயக்குநர், முப்படைகளின் தலைமை அதிகாரிகள், தொடர்புடைய முப்படைகளின் இயக்குநர்கள், அத்துடன் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.