இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெளிவுபடுத்தல்
ஜனவரி 29, 2025- நாட்டின் கடல் எல்லையை மீறியதாலும், கடற்படையின் சட்டப்பூர்வ உத்தரவுகளுக்கு இணங்கத் தவறியதாலும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.
- கைது நடவடிக்கையின் போது, ஆயுதங்களை பறிமுதல் செய்ய முயன்ற போதே கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்ததால் இரண்டு இந்திய மீனவர்கள் காயமடைந்தனர்.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதன் விளைவாக எழுந்துள்ள நிலைமை குறித்து தெளிவுபடுத்த, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோரின் தலைமையில் இன்று (ஜனவரி 29) பாதுகாப்பு அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 27) யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறைப் பகுதிக்கு அப்பால் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளைக் வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினால் அவதானிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடல் எல்லையிலிருந்து இந்த மீன்பிடிப் படகுகளை வெளியேற்ற வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவின் கடற்படைப் படகுகளால் ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடிப் படகும் 13 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படையின் சட்டப்பூர்வ உத்தரவுகளை மீறி அதன் கடமைகளை நிறைவேற்ற இடையூறு செய்த இந்திய மீன்பிடிப் படகை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் இலங்கை கடற்படை குழுவினருக்கு ஏற்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில், இந்திய மீனவர்கள் ஆக்ரோஷமாகச் செயற்பட்டு, தங்கள் மீன்பிடிப் படகை ஆக்ரோஷமான முறையில் இயக்கி, கடற்படையுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். கடற்படைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கமைய, மீன்பிடிப் படகில் ஏற முற்படுகையில் இந்திய மீனவர்கள், ஒன்றிணைந்து அவர்களை, தாக்க முயன்றுள்ளதுடன் கடற்படை வீரர்களுக்கு உயிராபத்து ஏற்படக்கூடிய வகையில் கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து அவரின் துப்பாக்கியைப் பறிக்கவும் முயற்சித்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில், தற்செயலாக உட்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இந்திய மீனவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த இரண்டு மீனவர்களுக்கும் கடற்படையினர் முதலுதவி அளித்து, உடனடியாக அவர்களை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக கடற்படை காங்கேசன்துறை பொலிஸில் புகார் அளித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் மீனவர்கள் ஜனவரி 28 அன்று காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மைலடி மீன்பிடி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கு முன்னரும், இலங்கை கடல் எல்லைக்குள் மற்றும் பிரத்தியேக பொருளாதார பிரதேசத்திற்குள் மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் ஊடுருவிய சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கடற்படை அவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளரும் கடற்படைத் தளபதியும் தெரிவித்தனர்.
வடபிராந்திய மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வடக்கு கடற்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைளை தடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படை தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளரும் கடற்படைத் தளபதியும் மேலும் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்ட பணிப்பாளர், வெளியுறவு அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி, பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றும் திரு. நிலுக கதுருகமுவ மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.