77வது தேசிய சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும்
தயார் நிலையில் உள்ளன
ஜனவரி 30, 2025
- தேசிய மறுமலர்ச்சியில் இணைவோம் எனும் தொனிப்பொருளில் இவ்வருட சுதந்திர தின விழா நடைபெறவுள்ளது.
- ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் வளர்க்குமுகமாக அனைத்து மத அனுசரிப்புகழும் நடைபெறவுள்ளன.
- விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும்.
77 ஆவது தேசிய சுதந்திர தின விழா நாட்டின் ஒரு புதிய சதாப்தத்தை ஆரம்பிக்கும் சுதந்திர தின நிகழ்வாக அமையும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்ன இன்று (ஜனவரி 30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சுதந்திர விழா குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், மக்களின் உரிமைகளை நிலைநிறுத்தி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழலை நிறுவுவதற்கான முயற்சியின் ஆரம்பமாக இது அமையும் என் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில், பெப்ரவரி 4, 2025 அன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய நிகழ்வுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு கொண்டாட்டங்களை அதிகளவான மக்கள் கண்டுகளிக்க அனுமதிக்கும் வகையில், அதிக பொது பங்கேற்பை உறுதி செய்வதற்கான ஏட்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரித்த பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), சுதந்திர தின விழாவின் முக்கிய நிகழ்வான அணிவகுப்பு மரியாதையில், முந்தைய ஆண்டை விட இராணுவ வீரர்களின் பங்கேற்பு 40% அளவு குறையும் என்று தெரிவித்தார்.
"இந்த ஆண்டு அணிவகுப்பில் மூன்று இலங்கை விமானப்படை விமானங்கள் மட்டுமே பங்கேற்கும், அத்துடன் இராணுவ கவச வாகனங்கள் பங்குபற்ற மாட்டாது காலாட்படை வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். மேலும், இலங்கை கடற்படைக் கப்பலில் நாட்டுக்காக்க பாரம்பரிய 25-பீரங்கி வேட்டு மரியாதை செலுத்தப்படும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, சுதந்திர தின கொண்டாட்டங்களில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 1,307 பேர், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 725 பேர், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 521 பேர், இலங்கை பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையைச் சேர்ந்த 505 பேர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 182 பேர் மற்றும் தேசிய மாணவன் படையானையைச் சேர்ந்த 500 பேர் பங்கேற்கவுள்ளார்கள் என தெரிவித்தார்.
சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் பிரதான நிகழ்ச்சி நிறைவு பெரும் வரை மற்றும் ஒத்திகைகள் நடைபெறும் காலத்திலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையைச் சேர்ந்த 1,650 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்தார்.
ஒத்திகைகள் மற்றும் பிரதான நிகழ்ச்சி நடைபெறும் காலகட்டத்தில் சீரான வீதி போக்குவரத்துக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏட்படாதவண்ணமும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக வாகன நிறுத்துமிடங்கள் உட்பட விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, மேலதிக செயலாளர் (உள்நாட்டலுவல்கள்) ஏ.ஜி. நிஷாந்த மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.