பங்களாதேஷ் கடற்படைக் கப்பலை பார்வையிட
பாதுகாப்பு செயலாளர் விஜயம்

பெப்ரவரி 03, 2025

நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான PNS 'சொமுத்ர ஜோய்' கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கொழும்பு துறைமுகத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை (ஜனவரி 31) விஜயம் செய்தார்.

கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் முகமட் ஷாஹ்ரியார் ஆலம், பாதுகாப்பு செயலாளரை வரவேற்றார். இலங்கைக்கான பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர் ஸ்தானிகர் அதிமேதகு ஆண்டலிப் எலியாஸும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றும் போது பாதுகாப்பு செயலாளர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்ததுடன் பிராந்திய கூட்டாண்மை மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் ஒத்துழைப்பு, கூட்டுப் பயிற்சிகள் மற்றும் தகவல் பகிர்வுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினார்.

இலங்கை கடற்படைத் தளபதி, பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், இராஜதந்திர உறுப்பினர்கள் உட்பட பல சிறப்பு விருந்தினர்களும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.