சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பொலிஸாரினால் அடக்கம்

மே 03, 2019

சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான மரண பரிசோதனை நிறைவு பெற்றதையடுத்து அவற்றினை அடக்கம் செய்யும் நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. பிரதேசத்திலுள்ள இஸ்லாமிய சமயத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய பயங்கரவாதிகளின் சடலங்கள் சமய வழிபாடுகள் எதுவுமின்றி அடக்கம் செய்யப்பட்டன.

எனினும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த ஆறு சிறார்களின் சடலங்கள் சமய வழிபாடுகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அவர்கள் தெரிவித்தார்.

இதேவேளை தற்கொலை தாக்குதல்தாரி சஹ்ரானின் மூத்த சகோதரி மட்டக்களப்பு பொலிஸாரினால் முதலாம் திகதி கைதுசெய்யப்பட்டார். இதன்போது சஹ்ரானினால் அவரது சகோதரிக்கு வழங்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது. விசாரணைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் ஒருங்கிணைந்த தேடல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.