பாதுகாப்பு பிரதி அமைச்சர் கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்
பெப்ரவரி 11, 2025பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) திங்கட்கிழமை (பெப்ரவரி 10) கடற்படை தலைமையகத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு பிரதி அமைச்சரை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட வரவேற்றத்துடன் அவருக்கு கடற்படை பாரம்பரியத்திற்கமைய மரியாதை அணிவகுப்பும் அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் கடற்படைத் தளபதியுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட பதில் அமைச்சர் அதன் நிறைவில் தனது விஜயத்தை குறிக்கும் வகையில் நினைவுப் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையின் கட்டமைப்பு, கடற்படை இராஜதந்திர முயற்சிகள், எதிர்நோக்கும் சவால்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் எதிர்காலத்திற்கான மூலோபாயத் திட்டங்கள் குறித்து கடற்படை பணிப்பாளர் நாயகம் -செயற்பாடுகள், விரிவான விளக்கம் ஒன்றை வழங்கினார்.
கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளிடையே உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், தேசிய பாதுகாப்பிற்கு அவசியமான ஒரு மூலோபாய சக்தியான கடற்படையின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அதன் பின்னர் கடற்படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களிடம் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் கடற்படையின் உறுதியான அர்ப்பணிப்பை பாராட்டினார். நாட்டின் முதன்மை கடல்சார் பாதுகாப்புப் படையான கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள மகத்தான பொறுப்பையும் அவர் அங்கு வலியுறுத்தினார்.
மேலும், அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கடற்படையின் பங்களிப்பை சுட்டிக்காட்டி, 'சுத்தமான இலங்கை' முயற்சியில் கடற்படையின் பங்களிப்பிற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
தேசிய வளர்ச்சி மற்றும் கொள்கை செயல்படுத்தலை ஆதரிப்பதில் கடற்படை வீரர்களின் முக்கிய பங்கையும் அவர் நினைவுகூர்ந்தார்.
ஒரு வலிமையான கடல்சார் படையாக இலங்கை கடற்படைக்கு சர்வதேச ரீதியில் உள்ள நற்பெயரை சுட்டிக்காட்டிய அவர், திறன், தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை நிபுணத்துவம் தொடர்பில் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கடற்படையினரின் திறன் மற்றும் அறிவு மேம்பாடு, தொழில்முறை மற்றும் புத்தாக்க கலாச்சாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு பிரதி தனது விஜயத்தின் போது, கடற்படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.