இந்த அமைச்சிலிருந்து ‘வினைத்திறனான குடிமக்களை’ உருவாக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – பாதுகாப்புச் செயலாளர்
ஜனவரி 01, 2021• பாதுகாப்பு அமைச்சு 'புத்தாண்டை' வரவேற்கிறது
சமய அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவமளித்து பாதுகாப்பு அமைச்சு இன்று புத்தாண்டு தினத்தை கொண்டாடியது.
புத்தாண்டை வரவேற்று தமது பணிகளை ஆரம்பிக்க கூடியிருந்த பாதுகாப்பு அமைசச்சின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன உரையாற்றுகையில், "இந்த புத்தாண்டின் ஆரம்பத்தில் கொவிட்-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் சவாலான சூழலில் பணியாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
புத்தாண்டு தின கொண்டாட்ட நிகழ்வில் ஜெனரல் குணரத்னவினால் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பின்னர், யுத்தத்தின்போது தாய்நாட்டிற்காக உயிநீர்த்த யுத்த வீரர்களின் நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அமைச்சின் அனைத்து உத்தியோகத்தர்களும் சத்தியப் பிரமாணம் செய்தனர்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த வைரஸ் தொற்று நிலைமையின்போதும் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து எதிர்பார்க்கப்படும் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
"இந்த சூழ்நிலையில் நீங்கள் உங்களது தனிப்பட்ட விடயங்களில் கவனத்தை செலுத்த வேண்டும் மற்றும் சுகாதார அதிகாரிகாரிகளின் வழிகாட்டுதல்கள் சரியாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும், இது எங்களது அன்றாட வேலையை த் தொடர எங்களுக்கு உதவும்", என்று அவர் மேலும் தெரிவித்தார்.
‘சுபீட்சத்தின் நோக்கு’ ஜனாதிபதி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு நாடு, வினைத்திறனான குடிமகன், மகிழ்ச்சியான குடும்பம், நீதியான, ஒழுக்கமான மற்றும் சட்ட மதித்து நடக்கும் சமூகம் எனும் நான்கு முக்கிய விடயங்களை மேற்கோள் காட்டிய அவர், ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்பு மிக்க ஒரு அணுகுமுறையின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
"இந்த அமைச்சிலிருந்து "வினைத்திறனான குடிமக்களை" உருவாக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு " என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சித்ராணி குணரத்ன, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.