இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை- இந்திய
பாதுகாப்பு செயலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு

பெப்ரவரி 11, 2025

இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு), இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்கை (பெப்ரவரி 11) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாவின் கர்நாடகா பிராந்தியத்திலுள்ள பெங்களூரில் நடைபெற்று வரும் எரோ இந்தியா 2025 விமான கண்காட்சியின் ஒர் அங்கமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்தல், கடல் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள முக்கிய விடயங்கள் குறித்து இரு நாட்டுப் பிரமுகர்களுக்கிடையிலான கலந்துரையாடல்களின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

இதுதவிர, இருதரப்பு இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பாதுகாப்பு விடயங்களில் ஆழமான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு அதிகாரிகளும் மீண்டும் உறுதிப்படுத்தினர். வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை திறம்படச் சமாளிக்க, புலனாய்வு தகவல்களை பகிர்ந்துகொள்வது, கூட்டுப் பயிற்சிகளை நடத்துதல் மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.