இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் நீர்வரைவியல் தொடர்பில் இருதரப்பு
ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை

பெப்ரவரி 14, 2025

இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை மேம்படுத்துவதற்கான முயட்சியின் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை தேசிய நீர்வரைவியல் அலுவலகம் (SLNHO) மற்றும் ஐக்கிய இராச்சிய நீர்வரைவியல் அலுவலகம் (UKHO) ஒரு இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இன்று (பிப்ரவரி 14) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இது இலங்கையின் நீர்வரைவியல் தயாரிப்புகளை சர்வதேச சந்தைக்கு சந்தைப்படுத்துவதன் மூலம் அறிவு பரிமாற்றம், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வருவாய் உருவாக்கம் உள்ளிட்ட நீர்வரைவியல் தொடர்பான ஒத்துழைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இருநாட்டுகளின் சார்பாக இங்கிலாந்து நீர்வரைவியல் அலுவலகத்தின் ரியர் அட்மிரல் அங்கஸ் எசென்ஹை மற்றும் இலங்கை தேசிய நீர்வரைவியல் அலுவலகத்தின் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் தேசிய நீர்வரைவியல் கவுன்சிலின் தலைவர் ரியர் அட்மிரல் சிசிர ஜெயக்கொடி (ஓய்வு), இங்கிலாந்து அரச அதிகாரிகள், மற்றும் பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு உட்பட தேசிய நீர்வரைவியல் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துக்  கொண்டனர்.

இலங்கைக்கான தனது விஜயத்தின் போது, ரியர் அட்மிரல் எசென்ஹை, பாதுகாப்பு செயலாளர் AVM தூயகொந்தா (ஓய்வு) மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோரைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய நீர்வரைவியல் துறையில் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு ஈடுபாடுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினார்.
 
இந்த இருதரப்பு ஒப்பந்தம், நீர்வரைவியல் துறையில் இலங்கைக்கு ஐக்கிய இராச்சியத்தினால் அளிக்கப்படும் தொடர்ச்சியான ஆதரவை பிரதிபலிப்பதாக  அமைக்கிறது. தற்போது, உலகின் சர்வதேச விளக்கப்படங்கள் மற்றும் மின்னணு வழிசெலுத்தல் விளக்கப்படங்களில் (ENCs) கிட்டத்தட்ட 75% இங்கிலாந்து நீர்வரைவியல் அலுவலகத்தின் மூலம் சந்தைப்படுத்தப்படுகின்றன. இலங்கை தேசிய நீர்வரைவியல் அலுவலகத்திற்கு தற்சமயம் அதன் நீர்வரைவியல் தயாரிப்புகளை சர்வதேச ரீதியாக  சுயமாக சந்தைப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சர்வதேச நன்மதிப்பு தேவையை அடைய UKHO சிறந்த பங்காளியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

புதிய கட்டமைப்பின் கீழ், UKHOவின் விரிவான உலகளாவிய வலையமைப்பு வழியாக ENCகள் மற்றும் பிற நீர்வரைவியல் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்ட SLNHO எதிர்பார்க்கிறது. இது வரலாற்று ரீதியாக இதுவரைக்கும் UKHOக்கு மூல தரவுகளை சமர்ப்பித்துக் கொண்டிருந்ததை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். மேலும், தற்போது UKHO வகிக்கும் முதன்மை விளக்கப்பட ஆணையத்தின் பங்கை இந்த ஒப்பந்தம் மூலம் எதிர்காலத்தில் இலங்கை அடைய வழி வகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விளக்கப்பட தயாரிப்பில் ஒரு பிரதான பங்காளியாக இலங்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு இந்த முயற்சி வழியமைப்பதுடன் நாட்டின் ஒரு நீண்டகால தேவையை அடையவும் உதவும். பாதுகாப்பு அமைச்சும் SLNHO வும் இந்த கூட்டாண்மை மூலம் நீர்வரைவியல் திறன்களை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலையான கடல் வள மேலாண்மையை உறுதி செய்வதற்கும், உலகளாவிய நீர்வரைவியல் முயற்சிகளுக்கு பங்களிப்பதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை இதன் மூலம்  வெளிப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.