பாதுகாப்பு பிரதி அமைச்சர் விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம்
பெப்ரவரி 14, 2025பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), வியாழகிழமை (பிப்ரவரி 13) விமானப்படைத் தலைமையகத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். தலைமையகத்திற்கு வந்த பிரதி அமைச்சர் சம்பிரதாய மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டு, ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரியினால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க பிரதி அமைச்சரை வரவேற்று விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த சந்திப்பின் போது இருவரும் பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து இரத்மலானை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியினால் இலங்கை விமானப்படை பற்றிய மேலோட்ட விளக்கவுரை ஒன்று நடத்தப்பட்டது. பின்னர் பிரதியமைச்சர் விமானப்படையின் தள கட்டளை தளபதிகள் மற்றும் நிலைய கட்டளை அதிகாரிகளுடன் இணையவழி கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து, விமானப்படையின் விமானச் செயல்பாடுகள் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் பற்றிய விரிவான விளக்கத்தை விமானப்படை வான் நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் மற்றும் விமானப்படை புலனாய்வுப் பணிப்பாளர் வழங்கினார். பின்னர் விமானப்படை தலைமையகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை பிரதி அமைச்சர் பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகளை அறிந்துக்கொண்டார்.
தனது விஜயத்தின் போது உரையாற்றிய பிரதி அமைச்சர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து உறுப்பினர்களும் தமது கடமைகளை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பணியாளர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றும் போது நாட்டின் கலாச்சார விழுமியங்களை நிலைநிறுத்துவதன் அவசியத்தையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.
தனது விஜயத்தின் போது தலைமையகத்தில் கடமையாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுடன் பிரதி அமைச்சர் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.