இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 8வது வருடாந்த கல்வி மாநாட்டை பாதுகாப்பு செயலாளர் ஆரம்பித்து வைத்தார்

பெப்ரவரி 15, 2025

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் (SLCOMM) 8வது வருடாந்த கல்வி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார் . இந்த விழா நேற்று (பெப்ரவரி 14) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.

கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், இராணுவ மருத்துவர்களின் சிறந்த சேவையை எடுத்துரைத்தார், 'இராணுவ மருத்துவர்கள் மருத்துவ வல்லுநர்கள் மட்டுமல்ல, அதிக கடமை, ஒழுக்கம் மற்றும் தியாக உணர்வு ஆகியவற்றால் கட்டுண்ட அதிகாரிகளும் கூட' எனக்கூறிய அவர், உயிரியல் பயங்கரவாதம், தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் இரசாயன, கதிரியக்க மற்றும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் போன்ற நவீன பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இராணுவ மருத்துவ நிபுணர்களை ஆயத்தப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சமகாலத்தில் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை உணர்ந்து, கடந்த எட்டு ஆண்டுகளில் புத்தாக்கம் மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றை ஊக்குவித்ததற்காக SLCOMM ஐப் பாராட்டினார்.

விழாவிற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை SLCOMM இன் தலைவரும் இலங்கை இராணுவத்தின் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை விசேட நிபுணருமான பிரிகேடியர் ப்ரிமல் பீரிஸ் வரவேற்றார். சிரேஷ்ட எலும்பியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் நரேந்திர பின்டோ விழாவின் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

'இராணுவ சுகாதார சிறப்பு, கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய தாக்கத்தை மேம்படுத்துதல்' என்ற கருப்பொருளில், இந்த ஆண்டு கல்வி கலந்துரையாடல்கள் நடைபெறும். அத்துடன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்படும்.

SLCOMM இன் சேவை மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், பாதுகாப்புச் செயலாளர், மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க (ஓய்வு), சத்திரசிகிச்சை நிபுணர் ரியர் அட்மிரல் நிக்கலஸ் ஜயசேகர (ஓய்வு) மற்றும் எயார் வைஸ் மார்ஷல் லலித் ஜயவீர ஆகியோருக்கு சிறப்புப் பாராட்டுச் விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் முப்படைத் தளபதிகள், முப்படைகளின் சுகாதார சேவை பணிப்பாளர்கள், SLCOMM இன் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.