இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை வலுப்படுத்துவதற்காக ஆழமற்ற நீரில்
அளவிடும் கருவியொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியது
பெப்ரவரி 19, 2025
இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை அபிவிருத்தி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், நவீன ஆழமற்ற நீர் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் Shallow Water Multi-Beam Echo Sounder இயந்திரத்தை இலங்கை கடற்படை நீர்வரைவியல் சேவைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வானது, இன்று (2025 பெப்ரவரி 18) கொழும்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவன வளாகத்தில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ. Paul Stephens மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோரின் தலைமையில் நடைப்பெற்றது.
அதன்படி, இலங்கை கடற்படையின் நீர்வரைவியல் சேவையால் சர்வதேச பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும் சமுத்திர வரைபடங்கள் / இலத்திரனியல் வரைபடங்களுக்குத் தேவையான துல்லியமான நீர்வரைவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும், இலங்கை கடற்படையின் நீர்வரைவியல் திறன்களை விரிவுபடுத்துவதற்காகவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட இந்த Multi Beam Echo Sounder இயந்திரத்தினால் துல்லியமான தரவுகளின் அடிப்படையில் உயர் தரத்துடன் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த Shallow Water Multi-Beam Echo Sounder என்ற இயந்திரத்தை இலங்கை கடற்படைக்கு கையளிக்கும் நிகழ்வில், முதலாவதாக இலங்கையின் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ. Paul Stephens அவர்கள் உரையாற்றினார். அதற்குபிறகு உரையாற்றிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இந்த விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு இலங்கை அரசின் சார்பில் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி, உயர் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட நீர்வரைவியல் ஆய்வுக் கருவியைப் பெறுவது இலங்கையின் சர்வதேச கடல்சார் பாதுகாப்புக் கடமைகளுக்கு இணங்குவதுடன், இலங்கையின் நீர்வரைவியல் துறையின் வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கின்றதாகவும். இந்த அதிநவீன தொழில்நுட்பமானது நீர்வரைவியல் ஆய்வுப் பணியின் செயல்திறனை அதிகரிப்பதாகவும் இது உயர் துல்லியமான கடல் வரைபடங்களை தயாரிப்பதற்கு பெரிதும் உதவுவதாகவும், மேலும் இலங்கையின் கடல் நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியை வழங்குவதாகவும் துறைமுகங்கள், கரையோர வலயங்கள் மற்றும் முக்கியமான நீர்வழிப் பாதைகள் போன்றவற்றை ஆய்வு செய்யவும் இலங்கையின் திறன் கணிசமாக மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதன்மூலம் தேசிய நீர்வரைவியல் சேவைக்கு நன்மை பயக்கும் எனத் தெரிவித்த கடற்படைத் தளபதி, இலங்கையின் தேசிய நீரியல் கட்டமைப்பையும் பிராந்திய கடல் விவகாரங்களில் அதன் நிலைப்பாட்டையும் பலப்படுத்துவதாகவும், இலங்கையின் கடல்சார் வலயங்கள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஆதரவை பாராட்டிய கடற்படைத் தளபதி கடல்சார் செயற்பாட்டுத் திறன்களை விருத்தி செய்வதற்காக அவுஸ்திரேலியா வழங்கிய ரத்னதீப மற்றும் மிஹிகத கப்பல்களையும் நினைவுகூர்ந்து, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த சமீபத்திய பங்களிப்பு, இரு நாடுகளுக்கிடையிலான நீடித்த நட்புறவையும் ஒத்துழைப்பையும், பாதுகாப்பான கடல்வழி போக்குவரத்து, கடல் வளங்களின் நிலையான முகாமைத்துவம் மற்றும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூட்டுறவை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
மேலும், இலங்கையின் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் உரையாற்றிய பின்னர், தேசிய அவுஸ்திரேலிய கடற்படை நீர்வரைவியல் கல்லூரியில் அடிப்படை நீர்வரைவியல் அளவீட்டு பாடநெறியில் திறமையான மாலுமிக்கான விருதை பெற்ற கடற்படை வீரர் ஆர்பிஜி. சிந்தகவின் திறமையை பாராட்டி பரிசொன்றையும் வழங்கினார்.
Shallow water Multi-Beam Echo Sounder இயந்திரம் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடமிருந்து கடற்படைத் தளபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னர், கடற்படை நீர்வரைவியல் சேவையின் P 267 கப்பலில் நிறுவப்பட்ட Shallow water Multi-Beam Echo Sounder இயந்திரத்தின் செயல்பாட்டு செயல்திறன் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதி உட்பட சிறப்பு விருந்தினர்களால் கண்காணிக்கப்பட்டது.
இலங்கை நீர்வரைவியல் அலுவலகத்தின் தலைவரும் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய அவர்களின் நன்றியுரையின் பின்னர், இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் நினைவு பரிசுப் பரிமாற்றமும் இடம்பெற்றது.
மேலும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் திருமதி லலிதா கபூர், இலங்கையின் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Amanda Johnston, உள்ளிட்ட தேசிய நீர்வரைவியல் அமைப்பின் தலைவர் ரியர் அட்மிரல் சிசிர ஜயக்கொடி (ஓய்வு), கடற்படையின் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ,மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா, கடற்படை முகாமைத்துவ சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், தேசிய நீர்வரைவியல் சேவையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நன்றி -news.navy.lk