ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்டெடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் பூரண ஆதவு

பெப்ரவரி 22, 2025
  • சட்டவிரோதமாக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடரும்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் மேற்படி குழுக்களின் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் இன்று (பெப்ரவரி 22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது வலியுறுத்தப்பட்டது.

குற்றக் குழுக்களுக்கு பல தசாப்த காலமாக கிடைத்த அரசியல் பாதுகாப்பே இந்த குற்றச் செயல்களின் அதிகரிப்புக்குக் காரணம் என்று பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ், அத்தகைய குழுக்கள் இனி எந்த ஆதரவையும் பெறாது என்று அவர் உறுதியளித்தார்.

இந்தச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், சட்டத்தை விரைவாகவும், கடுமையாகவும் அமுல்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, பாதுகாப்பு அமைச்சு தனிப்பட்ட பாதுகாப்பிற்காக சட்டவிரோதமாக வழங்கப்பட்ட துப்பாக்கிகளின் முறையான கணக்கெடுப்பை ஆரம்பித்துள்ளது. முப்படையினரின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், ஒரு சிறிய எண்ணிக்கையைத் தவிர மற்றைய அனைத்து துப்பாக்கிகளையும் திரும்பப்பெறபட்டுள்ளது. இந்த நடவடிக்கை சமூகத்தில் தற்போது நிலவும் குழப்ப நிலையை அகற்றவும் எதிர்காலத்தில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகள் வழங்கப்படுவதை தடுக்கவும் உதவும் என பாதுகாப்பு செயலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ அங்கத்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது குறித்து பேசுகையில் பாதுகாப்புச் செயலாளர், அண்மைக் காலங்களில் குற்றங்களில் ஈடுபட்ட இவ்வாறான பலர் ஆயுதப் பயிற்சி பெற்று சிறிது காலத்தில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் இராணுவ சேவையிலிருந்து வெளியேறியவர்கள் என்று குறிப்பிட்டார்.

பொலிஸாரின் உதவியுடன் இவர்களை கைதுசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் உறுதியளித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.டி. செனவிரத்ன, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.